Published : 16 Jan 2015 09:26 AM
Last Updated : 16 Jan 2015 09:26 AM

அடிப்படைவாதிகளால் குறிவைக்கப்பட்டுள்ளார் எழுத்தாளர் பெருமாள்முருன்: ட்விட்டரில் ஆதரவு தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஆதரவை பதிவு செய்துள்ளார்.

தமிழ் இலக்கியப் பணியில் இருந்து முற்றிலும் விலகுவதாகவும், இனி ஆசிரியர் பணியை மட்டும் தொடரவுள்ளதாகவும் எழுத்தாளர் பெருமாள்முருகன் அண்மையில் அறிவித்தார்.

பெருமாள்முருகன் பிரச்சினையில் பிரதான அரசியல் கட்சிகள் மவுனம் காப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், நேற்று மாலை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில், "அமைதியை விரும்பும் தமிழக மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கும் அடிப்படைவாதிகளால் தமிழ் எழுத்தாளர் பெருமாள்முருகன் குறிவைக்கப்பட்டுள்ளார்" என தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், "திமுக மதச்சார்பற்ற சிந்தனை கொண்ட ஒரு ஜனநாயக கட்சி. இக்கட்சி எப்போதுமே, கருத்துச்சுதந்திரத்துக்கு வழிவகுக்கும் சட்டப்பிரிவு (19)- ஐ ஆதரிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சமூக மற்றும் மதம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்று வரும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ் நாவலாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள் முருகனை குறி வைத்து நடத்தப்படும் சகிப்புத்தன்மையற்றவர்களின் தாக்குதல்களும், போராட்டங்களும் அடிப்படைவாதிகளால் ஆதரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது.

இவர்களுடைய ஒரே நோக்கம் அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருந்து கொண்டிருக்கும் தமிழக மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்குவது மட்டுமே.நாகரிகத்தின் உணர்வுகளையும், இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் பண்புகளையும் மதிக்கும் சகிப்புத் தன்மை உடைய பெருமைக்குரியவர்கள் தமிழர்கள். மதம் பற்றியோ,சாதி பற்றியோ நடக்கும் ஆரோக்கியமான விவாதங்கள் மற்றும் மனம் திறந்த ஆய்வுகள் போன்றவற்றிக்கு நாம் என்றுமே அஞ்சியத்தில்லை. மற்றவர்களின் உணர்வுகளை எப்போதும் மதிக்க தெரித்த நாம் அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள தனி நபரின் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு உறுதியுடனும் ஒற்றுமையுடனும் நாம் துணை நிற்கிறோம்.

கடவுள் மறுப்பு,ஹிந்து மதம்,கிறித்துவ மதம் மற்றும் இஸ்லாம் போன்றவற்றின் பெயரில் நாம் வன்முறையிலும் ஈடுபடுவதில்லை. அப்படி வன்முறையில் ஈடுபடுவோருக்கு துணை போவதும் இல்லை ஜனநாயக ரீதியான அமைப்புகள் மூலம் வழங்கப்படும் கருத்துக்களையும் அதற்கு எதிர் கருத்துக்களையும் நாம் ஆதரிக்கிறோம்.சமீபத்தில் கருத்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை சுட்டு கொன்ற மத அடிப்படைவாதிகளின் செயலை எதிர்த்து நடத்தப்பட்ட பிரம்மாண்டமான பேரணி மூலம் சுதந்திரம்,சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை போன்றவற்றிக்கு ஒரு பொருத்தமான முன்னுதாரணத்தை பிரான்ஸ் நாடு நமக்கு எடுத்துக்காட்டி இருக்கிறது.இந்த நேரத்தில் வோல்ட்டயரின் வாசகமான,"நீங்கள் பேசுவதை நான் ஏற்று கொள்ளாவிட்டாலும்,உங்கள் பேச்சுரிமையை பாதுகாக்க என் உயிரையும் கொடுக்க நான் தயாராகவுள்ளேன்." என்பதை நினைவில் வைத்துக்கொள்ள இது சரியான தருணம்.

நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட புத்தகத்திற்கு எதிரான வன்முறையில் ஈடுபாடுவோர் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.தமிழ் நாடும் அதன் மக்களும், மதத்தின் பெயரால் நடக்கும் இந்த வன்முறைகளை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். தமிழக மக்களின் கருத்து சுதந்திரத்தை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்.மதசார்ப்பின்மை போற்றும் ஜனநாயக பேரியக்கமான திராவிட முன்னேற்ற கழகம் இது போன்ற மத அடிப்படைவாதத்திற்கு என்றும் எதிராக இருக்கும்.

இந்திய அரசியல் சட்டம் 19ன் கீழ் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை பாதுகாக்க கழகம் இறுதி வரை எவ்வித தொய்வுமின்றி உறுதியாக துணை நிற்கும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x