Last Updated : 21 Jan, 2015 10:54 AM

 

Published : 21 Jan 2015 10:54 AM
Last Updated : 21 Jan 2015 10:54 AM

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 5

1643-ல் இருந்து 1715 வரை பிரான்ஸை ஆண்ட மன்னன் பதினான்காம் லூயி தன் முத்திரையை சரித்திரத்தில் அழுத்தமாகவே பதிய வைத்தார். சூரிய மன்னன் (SUN KING) என்றும் அறியப்பட்ட இவர்தான் ஐரோப்பியச் சரித்திரத்திலேயே மிக அதிக வருடங்கள் ஆட்சி செய்த மன்னர். 72 வருட ஆட்சி!

பதிமூன்றாம் லூயி மன்னனுக்கும், ஆஸ்திரிய இளவரசி ஆனேவுக்கும் பிறந்தவர் இவர். எதிர்பாராத கட்டத்தில் தந்தை இறந்து விட, தன் இளம் வயதிலேயே முடிசூட்டிக் கொண்டார் பதினான்காம் லூயி. இளம் வயது என்றால்? நான்கே வயது!

தாய் அவருக்குப் போதிய கவனிப்பை அளிக்கவில்லை. பணியாட்களின் தயவில் வளர்ந்தது ராஜ குழந்தை. ஒருமுறை தவறி குளத்தில் விழுந்து உயிருக்கே போராடி அந்தக் குழந்தை தப்பித்தபோது ‘’கடவுளுக்கு எதிராக நீ எப்போதாவது குற்றம் இழைத்திருப்பாய். அதனால்தான் இப்படி நடந்தது’’ என்று தாய் ஆனே கடிந்து கொண்டாளாம். அது மன்னன் மனதில் ஆழமாகவே பதிந்துவிட்டது. தீவிர கத்தோலிக்கராக வளர்ந்தார் அவர்.

கார்டினல் ரிசேலியு என்பவர் அப்போது முதல் அமைச்சராக விளங்கினார். செல்வாக்கு மிக்கவர். பிரான்ஸை அதிக அதிகாரமுள்ள மைய ஆட்சி கொண்டதாக ஆக்கியதிலும் தலைசிறந்த உளவு நிறுவனத்தை அங்கு உருவாக்கி சிறப்படையச் செய்ததிலும் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

ஸ்பெயினுடனான போரில் பிரான்ஸ் வெற்றி பெற, ஸ்பெயினின் பிடியிலிருந்த நெதர்லாந்தின் ஒரு பகுதி பிரான்ஸின் வசம் வந்தது. ஐரோப்பாவின் சக்தி மிகுந்த நாடாக பிரான்ஸ் உருவானது. ஸ்பெயினை ஆண்ட நான்காம் பிலிப்பின் மகள் மரியா தெரசாவை பிரான்ஸ் மன்னன் பதினான்காம் லூயி திருமணம் செய்து கொண்டபோது அரசியல் உலகம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. அவர்களுக்குப் பல குழந்தைகள் பிறந்தாலும் ஒரே குழந்தைதான் பெரியவனாகும்வரை உயிர் வாழ்ந்தது.

பிரான்ஸுக்கு முதல் அமைச்சர் என்ற ஒருவர் இருப்பதும் அவர் முக்கிய முடிவுகள் எடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும் வழக்கமாக இருந்த ஒன்றுதான். ரிசேலியுவுக்குப் பிறகு மஸாரின் என்பவர் முதல் அமைச்சராகி தன் பங்குக்கு பிரான்ஸில் கலைகளை வளரச் செய்தார். அரசுக்கும் தனக்கும் எதிரான புரட்சிகளை வெற்றிகரமாக ஒடுக்கினார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு மன்னர் ஒரு எதிர்பாராத அறிவிப்பைச் செய்தார்.

’’அடுத்த முதல் அமைச்சர் என்று யாரும் கிடையாது. நான்தான் மன்னன். எனக்கு நானேதான் முதல் மந்திரி’’ என்று அறிவித்துக் கொண்ட பதினான்காம் லூயி இறுதிவரை அதை கடைப்பிடித்தார். ஒப்புக்குச் சில அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களை அவர் எப்போது நியமிப்பார், எப்போது நீக்குவார் என்பது யாருக்குமே தெரியாது.

ஆனால் ஒன்றில் மட்டும் மிகத் தெளிவாக இருந்தார் லூயி. தன் அமைச்சரவையில் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ, புகழ்பெற்றஇளவரசர்களோ, ராணுவத்தில் பணியாற்றிய அறிஞர்களோ கட்டாயம் இருக்கக் கூடாது!

உள்நாட்டு விவகாரங்களிலும் வெளிநாட்டுத் தொடர்புகளிலும் மன்னன் பதினான்காம் லூயி ஈடு இணையற்று விளங்கினார். நாட்டில் புதிய, தெளிவான சட்டங்கள் இயற்றப்பட்டன. நிதி அமைச்சராக விளங்கிய கால்பர்ட் தன் திறமைகளை வெளிப்படுத்தினார். சிறப்பான பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தனார்.

இந்தக் கால கட்டத்தில் கலைகள் மிகச் செழிப்பாக வளர்ந்தன. ஓவியம், சிற்பம் போன்ற கலைகளுக்கு தனித்துறையை தொடங்கினார். அறிவியலும் ஏற்றம் கண்டது. பாரீஸில் ஒரு பெரும் தொலைநோக்ககம் (OBSERVATORY) உருவாக்கப்பட்டது. இலக்கிய அகாடமி அமைப்புக்கும் புது வெளிச்சம் கிடைத்தது. ஆனால் அது முழுக்க அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தொடர்ந்தது.

அற்புதமான கட்டிடங்களைக் கட்டுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்தார் மன்னர். லூவர் அருங்காட்சியகக் கட்டிடம்கூட அவர் காலத்தில் எழுப்பப்பட்டதுதான். ஸ்பெயினின் அதிகாரத்திலிருந்த சில பகுதிகள் பிரான்ஸோடு இவர் காலத்தில் இணைக்கப்பட்டன.

ஆனால் நிர்வாகத்தில் பெரிதும் உதவிய நிதி அமைச்சர் கால்பர்ட்டின் இறப்புக்குப் பிறகு ஆட்சியில் பல மாறுதல்கள் உண்டாயின. பிரான்ஸில் உள்ள பிராடஸ்டன்ட் சிறுபான்மையினரின் சிறப்பு வழிபாட்டு உரிமையை நீக்கினார் மன்னர். பிரெஞ்சு ப்ராடெஸ்டன்டுகளை ‘ஹுகனாட்ஸ்’ என்பார்கள். இவர்களுக்கான வழிபாட்டு உரிமைகளை ரத்து செய்தார் மன்னர். அது மட்டுமல்ல, ப்ராடஸ்டன்ட் ஆலயங்களையும் இடித்துத் தள்ள உத்தரவிட்டார்.

ப்ராடஸ்டன்ட் பள்ளிகள் மூடப்பட்டன. அந்தப் பிரிவினரின் திருமணங்கள் செல்லாது என்று சட்டமியற்றும் அளவுக்கு மன்னரின் கத்தோலிக்க வெறி எல்லை தாண்டியது. கத்தோலிக்கக் கல்வியும் ஞானஸ்நானமும் ல்லா பிரான்ஸ் குழந்தைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டது.

இதன் காரணமாக தொழிலதிபர்களாக இருந்த ப்ராடஸ்டன்ட் பிரிவினரில் பலரும் பிரான்ஸைவிட்டு நீங்கினார்கள். ஆக பெருத்த முதலீடுகளும் திறமையான நபர்களில் கணிசமானவர்களும் நாட்டைவிட்டு நீங்கின(ர்). இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இப்படிச் சென்றவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள்.

மன்னரின் வேறு ஒரு செயல்பாடும் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. வெர்செய்ல்ஸ் என்ற பகுதி தலைநகரிலிருந்து 25 மைல் தொலைவில் இருந்தது. அங்கு மிக பிரம்மாண்டமான அரண்மனை ஒன்றை எழுப்பினார் மன்னர். இதற்கான செலவு நாட்டின் கஜானாவை வெறுமையாக்கியது.1709-ல் உண்டான பிரான்ஸின் மிகக் கடுமையான குளிரும் பலரை வீழ்த்தியது.

72 வருட ஆட்சிக்குப் பிறகு தனது 77-வது வயதில் மன்னர் பதினான்காம் லூயி இறந்தார். அவரது ஐந்து வயது பேரன் மன்னன் பதினைந்தாம் லூயி ஆனான்.

(இன்னும் வரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x