Published : 10 Jan 2015 10:39 AM
Last Updated : 10 Jan 2015 10:39 AM

முத்தையாவின் சுவீகார ரத்துக்கு கடிதம் கொடுத்தார் எம்.ஏ.எம்.

ஐயப்பன் என்ற முத்தையாவை சுவீகாரம் எடுத்ததை ரத்து செய்துவிட்டதாக தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி முறைப்படி கடிதம் கொடுத்திருக்கிறார்.

எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் அவரது சுவீகார புதல்வர் ஐயப்பன் என்ற முத்தையாவுக்கும் இடையில் நடந்துவரும் பனிப் போர் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. முத்தையாவின் சுவீகாரத்தை எம்.ஏ.எம். ரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் இதற்காக செட்டி நாட்டுப் பகுதியில் ரகசிய தீர்மானம் கையெழுத்து வாங்கப்பட்டு வருவதாகவும் ஏற்கெனவே ‘தி இந்து’வில் செய்தி வெளியாகி இருந்தது.

அதன்படி, முத்தையாவின் சுவீகாரத்தை ரத்து செய்துவிட்டதாக இளையாற்றங்குடி கைலாசநாதர் கோயிலுக்கு முறைப்படி கடிதம் கொடுத் திருக்கிறார் எம்.ஏ.எம். இதை யடுத்து, எம்.ஏ.எம்.மின் பிரிவான இளையாற்றங்குடி கோயில் பட்டிணசாமி பிரிவு புள்ளியிலிருந்து முத்தையாவை நீக்கிவிட்டதாக கோயில் காரியக் கமிட்டி முறைப்படி அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து செட்டிநாட்டு அரண்மனைக்கு நெருக்கமான வட்டத்தினர் ‘தி இந்து’விடம் பேசுகையில், ’’இளையாற்றங்குடி கோயில் பட்டிணசாமி பிரிவுக்கு பரிபாலன கமிட்டி உறுப்பினர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

முத்தையாவின் சுவீகாரத்தை ரத்து செய்வது தொடர்பான ரகசிய தீர்மானத்தில் இவர்களிடம்தான் கையெழுத்து வாங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஏகமனதாக தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அதனடிப்படையில், ’முத்தை யாவின் சுவீகாரத்தை எங்கள் குடும்பத்துக்குள் பேசி ரத்து செய்திருக்கிறோம்’ என்று எம்.ஏ.எம்-மும் இளையாற்றங்குடி கோயிலுக்கு முறைப்படி கடிதம் கொடுத்துவிட்டார்.

இதையடுத்து, இளையாற் றங்குடி கோயில் காரியக் கமிட்டி கூடி முத்தையாவை பட்டிணசாமி புள்ளியிலிருந்து கடந்த 5-ம் தேதி முறைப்படி நீக்கி இருக்கிறார்கள்.

முத்தையாவின் சுவீகாரத்தை ரத்து செய்திருப்பதன் மூலம் ஏற்கெனவே அவரது கைக்குப் போன அரண்மனை சொத்துகளை மீட்க முடியுமா என்பது சட்டம் சார்ந்த விஷயம். ஆனால், எம்.ஏ.எம். வசம் எஞ்சியுள்ள சுமார் மூவாயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் மீது முத்தையா உரிமை கொண்டாட முடியாது. அதை எம்.ஏ.எம். தனது இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’’ என்று சொன்னார்கள்.

சுவீகாரத்தை ரத்து செய் திருப்பது குறித்து எம்.ஏ.எம்.ராமசாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, “அது பற்றி சொல்றதுக்கு என்ன இருக்கு?’’ என்றதோடு முடித்துக் கொண்டார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x