Published : 04 Jan 2015 11:47 AM
Last Updated : 04 Jan 2015 11:47 AM

வானொலிகளின் வசந்தகாலம்

தொலைக்காட்சிகளின் யுகம் இது. நெடுந்தொடர்கள், நல்ல நாட்களில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள், நாள் முழுவதும் செய்திகள் என்று கண்களுக்கு ஓய்வே இருப்பதில்லை. தொலைக்காட்சியில் பார்க்கத் தவறிய நிகழ்ச்சி களை இணையத்தில் பார்த்துக்கொள்ளவும் வசதி இருக்கிறது. ஆனால், தொலைக்காட்சி புழக்கத்துக்கு வராத காலத்தில் காதுகள்தான் கண்கள்! செவி வழி நுழையும் செய்திகள், பாடல்கள், வானொலி நாடகங்கள் கற்பனைகளை உருவாக்கிய அற்புதக் காலம் அது.

என் சித்தப்பாவிடம் பழைய காலத்து மாடல் வானொலி இருந்தது. டிரங்குப் பெட்டி மாதிரி இருந்த அந்த வானொலியைச் சிறுவயதில் பார்த்துப் பிரமித்திருக் கிறேன். காலை 6 மணிக்கு நிகழ்ச்சி கேட்க வேண்டுமானால், ஐந்தரைக்கே அதை தயார் செய்துவிடுவார் சித்தப்பா. வலது பக்கத்தில் இருக்கும் குட்டி பல்பு எரிந்து ‘சொய்ங்’ என்று சத்தம் எழுப்பிய படிப் பாட ஆரம்பிக்கும்போது அநேகமாக எங்களுக்குத் தூக்கம் கலைந்திருக்கும். வானொலியில் துணி காயப்போடும் கம்பி மாதிரி நீண்ட ஏரியல் அதில் இருக்கும்.

அறியாமையின் அழகு!

‘இந்தப் பொட்டியிலிருந்து எப்படி சித்தப்பா பாட்டுக் கேக்குது?’ என்று கேட்ட போது சித்தப்பா சொன்ன விளக்கத்தை மறக்கவே முடியாது. மிகப் பெரிய ரகசியத்தை எங்களிடம் மட்டும் சொல்வது போன்ற பாவனையுடன் மெதுவாகச் சொல்வார், “பாட்டுப் பாடுறவங்க மொத நாளே இந்தப் பொட்டிக்குள்ள போய் உக்காந்துக்குவாங்க… பாடி முடிச்சவுடனே காத்துல ஏறிக் காணாமப் போய்டுவாங்க.” சிறுவர்கள் எங்களுக்கு என்ன தெரியும், நம்பித்தொலைத்தோம். ஆனால், அந்த அறியாமை பல கற்பனை களைத் தூண்டிவிட்டது தனிக் கதை.

வானொலியைப் பொக்கிஷம் போல் பாதுகாத்தார் சித்தப்பா. வானொலிப் பெட்டியைச் சுற்றி மரத்தாலான காப்புப் பெட்டியைப் பொருத்தி வைத்திருந்தார். மேலிருந்து கீழே இறக்கி மூடும் கண்ணாடிக் கதவு உண்டு அதற்கு. சிறுவர்கள் எங்கள் கைபடாத உயரத்துக்கு வானொலியை வைத்திருப்பார் சித்தப்பா. அவருக்குத் தெரியாமல் யாரேனும் தொட்டால் தொலைத்துவிடுவார். “நூறு ரூபா குடுத்து வீராவரத்தில் வாங்கினதுடா” என்பார்.

டெல்லி அஞ்சலில் ஒலிபரப்பாகும் இந்துஸ்தானி இசையை அதில் கரகரப் பாய் கேட்கும்போது வித்தியாசமாய் இருக்கும். அப்பாவும் வானொலி விசிறிதான். அவரால் வந்தே மாதரம் கேட்காமல் அன்றும் இன்றும் என்றும் அவரால் நாளைத் தொடங்க முடியாது. சூரியன் உதித்தும் உதிக்காமலும் இருக்கும் அந்தக் கருக்கலோடு இயைந்த அந்தக் காலைவேளை வானொலியின் மங்கல இசை கேட்கும்போது, உலகமே கொஞ்சம் கொஞ்சமாய் பிரகாசமாவதாய்த் தோன்றும்.

நெல்லை வானொலியின் சான்றோர் சிந்தனை அப்பாவுக்குப் பிடித்தமானது. நாகூர் ஹனிபாவின் பாடல்கள், பி.சுசீலா வின் ‘தாமரைப்பூவில் அமர்ந்தவளே..’ பாடல், ‘ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?’ பாடல் என்று காலையில் ஒலிக்கும் பாடல்கள் மனசை லேசாக்கிவிடும். தென்கச்சி சுவாமிநாதனின் இன்று ஒரு தகவலும் மறக்க முடியாதது.

இலங்கை எனும் பூங்காற்று

இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம், விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு, பிபிசியின் தமிழோசை, ஆல் இந்தியா ரேடியோ என்று பல வானொலி நிலையங்கள் எங்கள் காதுகளுக்குச் சாமரம் வீசின. இலங்கை வானொலியின் மயில்வாகனம், கே.எஸ்.ராஜா, ராஜேஷ்வரி சண்முகம், பி.எச்.அப்துல் ஹமீது, விமல் சொக்கநாதன், சில்வெஸ்டர் பாலசுப்ரமணியம், கமலினி செல்வ ராஜன், எழில்வேந்தன் ஆகியோரின் குரல்களுக்குக் கடல் கடந்தும் ரசிகர்கள் இருந்தார்கள்.

‘பிறந்தநாள்… இன்று பிறந்தநாள்’ என்ற பாடலுடன் தொடங்கும் வாழ்த்து நிகழ்ச்சியை என்றுமே மறக்க முடியாது. வாழ்த்துபவர்களின் பட்டியலில் ‘அப்பப்பா, அம்மம்மா’ என்று சொல்லும்போது உறவுமுறைப் பெயர்கள்குறித்து ஆச்சரியம் ஏற்படும். நமக்கே பிறந்தநாள் வந்ததைப் போல் அறிவிப்பாளர்களின் குரல்கள் ஆனந்தப் படுத்தும். 30 ஆண்டுகளுக்கு முன் வந்த பாடலின் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் பற்றிய தகவல்களை எந்தக் குறிப்பும் இல்லாமல் நினைவில் இருந்தே எடுத்துச் சொல்வார்கள். அந்த அளவுக்கு ரசனை மிகுந்த அறிவிப்பாளர்கள் அவர்கள்.

செய்திகள் வாசிப்பது…

அகில இந்திய வானொலியும் சளைத்ததல்ல. ‘செய்திகள் வாசிப்பது சரோஜ்நாராயண் சுவாமி’ என்ற அந்தக் கரகரப்பான காந்தக் குரலை மிகவும் நேசித்தோம். இடையிடையே நிறுத்தி மூச்சு வாங்க எடுத்துக்கொள்ளும் அவர் பாணி வித்தியாசமானது. சில நாட்களில் அவர் செய்தி வாசிக்கும்போது தாள்களை நகர்த்தும் சத்தம்கூடத் தெளிவாய்க் கேட்கும். கோபால் பல்பொடி, பொன்னான புதிய ரக்சோனா, பாண்ட்ஸ் என்று பல்வேறு பொருட்களின் விளம்பரங்களைக் கேட்பதே ஆனந்தமாக இருக்கும். நாம் பயன்படுத்தும் பொருளைப் பற்றி வானொலியில் சொல்கிறார்களே என்று ஒரு சின்ன குதூகலம் இருக்கும்.

இன்றும் வானொலிக்கான தனி ரசிகர்கள் உண்டு. ஆனால், காதுகளுக்காக மட்டும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பான காலம் முடிந்துவிட்டது. பண்பலையில் பாட்டும் பேச்சும் என்று பல விஷயங்கள் ஒலிபரப்பாகின்றன. என்னவோ அவற்றில் மனம் லயிப்பதில்லை. இளமைக் காலத்தில் வானொலியில் கேட்ட பாடல் களைக் கேட்கும்போது, அந்தக் கால நினைவுகளின் இனிமையை இன்றும் உணர முடிகிறது.

- முனைவர் சௌந்தர மகாதேவன்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர்,தொடர்புக்கு: mahabarathi1974@gmail.com​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x