Published : 11 Jan 2015 11:26 AM
Last Updated : 11 Jan 2015 11:26 AM

காணாமல் போன குழந்தைகளை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு திருவள்ளூர் ஆட்சியர் வலியுறுத்தல்

திருவள்ளுர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளின் விவரங்களை கணக்கெடுத்து, அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் வீரராகவ ராவ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில், ‘ஆபரேஷன் ஸ்மைல்’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஒருநாள் பயிற்சி நேற்று நடைபெற்றது. அரசு அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான இந்த பயிற்சியை ஆட்சியர் வீர ராகவ ராவ் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசின் அறிவுரைப்படி, தமிழ்நாட்டில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக ‘ஆபரேஷன் ஸ்மைல்’ என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த திட்டத்தின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து குழந்தை இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்களில் காணாமல் போகும் மற்றும் ஆதரவற்று பிச்சை எடுக்கும் சிறார்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காவல் துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, போக்குவரத்து துறை ஆகியவற்றின் அலுவலர்கள், சைல்டு லைன், குழந்தைகள் இல்ல நிர்வாகிகளும் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஏற்கெனவே கடந்த 3 மாதங்களாக மாவட்டத்தில் பிச்சையெடுக்கும் சிறார்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தின் 14 ஒன்றியங்க ளிலும் உதவி கல்வி அலுவலர், சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. காணாமல் போன குழந்தைகள் விவரம் மாவட்ட இணையதளத்தில் (www.thiruvallur.tic.nic.in) வெளியிடப்படவுள்ளது என்று ஆட்சியர் கூறினார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சையத் ரவூப் ஆபரேஷன் ஸ்மைல்குறித்த பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் ரூத் வெண்ணிலா, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் எல்லீஸ் பானு, இளைஞர் நீதிக் குழும உறுப்பினர் கோமளா, சமூக நலத்துறை, கல்வித்துறை, காவல்துறை, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x