Published : 16 Jan 2015 11:37 AM
Last Updated : 16 Jan 2015 11:37 AM

விஸ்வநாதரின் விலாசம் வாரணாசி

வாரணாசி, காசி, பெனாரஸ். இந்த நகரம் இந்திய ஆன்மிகத்தின் மையம். இந்த நகரம் தன்னுடைய குறுகிய சந்துகளிலும், மூச்சைத் திணற வைக்கும் கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசலிலும், 80-க்கும் மேலான காட் என்று அழைக்கப்படும் படித்துறைகளிலும் வாழ்கிறது. இருப்பினும் இது நம் தேசத்தின் அதிபுனிதமான இடம். உலகத்தின் மிகத் தொன்மையான நகரமாகிய காசியைத் தேடி வாரணாசி சென்றேன்.

இது எல்லாத் தெய்வங்களின் வாசஸ்தலம்.ஒவ்வொரு படித்துறைக்கும் ஒரு புராணம். ஜாதகக் கதைகளில் வரும் சக்தி மிகுந்த ராஜ்ஜியம். புராதனம் நிரம்பி வழியும் பண்டைய பாத்திரம். இதுதான் மார்க் ட்வைன் எனும் அறிஞரை “காசி புராணங்களை விடப் புராதனமானது. பாரம்பரியத்தைவிடப் பழமையானது. இவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தாலும் அதைவிட இருமடங்கு தொன்மையானது' என்று வியக்க வைத்தது. இது இந்து மதத்தின் இன்றியமையாத குறியீடு. இவை எல்லாவற்றையும் , சுழன்று சுழன்று வரும் குறுகிய சந்துகளைக் கடந்து படித்துறையை அடையும்போது தெளிவாகக் கண்முன் விரியும்.

ஆரத்தி நடக்கும் இடம்

இந்திய மண்ணில் தெய்வீகம் நதிகளில் பவனி வருகிறது. மாலையில் கங்கையைக் காண படித்துறைக்குச் செல்கிறோம். ஒவ்வொரு படித்துறையிலும் குறைந்தது 80 படிகள். சில இடங்களில் செங்குத்தாக உள்ளன. அஸ்ஸி காட்டிலிருந்து 80-க்கும் மேலான படித்துறைகள். 10 மைல் நீளத்திற்கு. தஸ்ஸா ஸ்வத மேதா காட், கங்கையினால் சுத்தப்படுத்தப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் திரள்கிறது. மந்திர கோஷங்கள் விண்ணை முட்டுகின்றன. பூசாரிகள் ஆரத்தியைத் தயார்படுத்துகின்றனர். அவ்வப்போது விளக்குகள் நீரில் மிதக்கின்றன. அடுத்த சில கணங்கள் வார்த்தைகளினால் விவரிக்க முடியாத பிரம்மானந்தம்.

குருமார்கள் ஆரத்திக்காக அணிவகுக்கின்றனர். அநேகமாக அந்தச் சமயத்தில்தான் மற்ற படித்துறைகளிலும் ஆரத்தி தொடங்குகிறது. அங்கிருக்கும் கோவில்களிலும் பூஜை தொடங்குகிறது. எல்லா இடங்களிலிருந்தும் வரும் பக்தி கோஷங்கள் ஆத்மாவில் கலக்கின்றன.

மறு நாள் சூரிய உதயம் ஒளிமயமாக இருந்தது. சூரியன் , புகை மண்டலத்திலிருந்து ராட்சச ஜோதி போல வெளி வந்து ஜொலித்தது. விடியலில் படகில் போவது ஒரு மாறுபட்ட அனுபவம். நீர்த்திவலைகள் வெள்ளியாகப் பளபளத்தன. நதி நீர் தன்னுள்ளே பூக்கள், அரை குறையாய் எரிந்த பிணங்கள் என்று எல்லாவற்றையும் கிரகித்துக்கொள்வது போல் தோன்றியது. இந்துக்கள் அவர்களது உடல்கள் இங்கே எரிக்கப்பட்டால் மோட்சம் கிட்டும் என்று நம்புகிறார்கள். மிகப்பெரிய திறந்த வெளி சுடுகாடான மணிகர்ணிகா காட்டில், 24 மணி நேரமும் சடலங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன.

காசி விஸ்வநாதர் கோவில்

தேவி அஹில்யா ஹோல்கர் என்ற ராணியால்18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை ரிக் ஷாவிலும், நடந்தும் தான் அடைய முடியும். முட்டு சந்துகளும் எதிரே வரும் மாடுகளும் நம்மைப் பயமுறுத்தினாலும் விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது. காசி விஸ்வநாதர் என்று பெரியதாக நினைப்பவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். கீழே குனிந்து பார்த்தால்தான் மூலவர் தெரிவார்.

அவருக்குத்தான் பூஜை, அபிஷேகம் எல்லாம். சின்ன லிங்கம். ஒவ்வொரு சந்நிதியிலும் பண்டாக்கள். விஸ்வநாதருக்கு பிறகு கேதாஸ்வரர் கோவிலுக்குச் செல்கிறோம். பின் துர்கா தேவி, சங்கட் மோச்சன் (அனுமார்), கால பைரவர் என்று பட்டியல் நீள்கிறது. படித்துறைகளில் கணக்கிலடங்கா கோவில்கள். நேரமின்மை காரணமாகத் திரும்புகிறோம்.

தேவ் தீபாவளி

அடுத்த நாள் தீபத் திருவிழா. தேவ் தீபாவளி என்று பெயர். காலையில் மறுபடி படகு சவாரி. பித்ருக்களுக்குப் பிண்டமிடுவது மட்டும் அந்தக் காலம். இப்போது அதுவே பொழுது போக்காகி விட்டது. காசி சுற்றுலாத் தளமாகவும் ஆகிவிட்டது. மாலை ஐந்து மணிக்கு கைடு அழைத்துச் செல்கிறார். மறுபடியும் தஸாஸ்வத மேதா காட். அப்போதே கூட்டம் பெருகி விட்டது. படிகளில் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. எல்லாப் படித்துறைகளிலும் தீபங்கள் சுடர் விடுகின்றன. சிறிது நேரத்தில் நகரமே அங்கு குழுமி விட்டது. இதை நீரிலிருந்து காண்பதற்கென்றே படகுகள் நதியில் விடப்படுகின்றன.

அங்கிருந்து காணக் கண் கோடி வேண்டும். தேவ் தீபாவளி அன்று வானவர்கள் விஸ்வநாதரைத் தரிசிக்க கீழிறங்கி வருவதாக ஐதீகம். அவர்களை வரவேற்பதுதான் இந்த விழாவின் தாத்பர்யம். காசியே பிரகாசமாய் ஜொலித்தது. கங்கா தேவிக்குச் சிறப்பு ஆராதனை, வழிபாடுகள். அகிற்புகை எங்கும் பரவுகிறது. வேத மந்திரங்களின் உச்சாடனத்துடன் அந்த தீப ஆராதனை அந்த இடத்தின் சமய பற்றுதலைப் பிரதிபலித்தது. அவை சத்தியம், தூய்மை மற்றும் ஆன்மிகத்துடன் கூடிய ஞான ஒளியாகத் தெரிந்தன. பெனாரஸ் ‘விளக்குகளின் நகரம்' என்று அழைக்கப்படுவதன் காரணம் இப்போது தெரிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x