Published : 13 Jan 2015 12:03 pm

Updated : 13 Jan 2015 13:09 pm

 

Published : 13 Jan 2015 12:03 PM
Last Updated : 13 Jan 2015 01:09 PM

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 1

1

‘‘வாள்முனையைவிடப் பேனா வலியது’’ என்பார்கள். துப்பாக்கியைவிட வலியதா? இதுதான் பாரீஸின் தற்போதைய தலைப்புச் செய்தி.

பிரான்ஸ் நாட்டின் ‘தலை’யான பாரீஸ் மிகப் பெரிய நகரம். இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 23 லட்சம். மொத்த பிரான்ஸில் சுமார் 19 சதவீதம் பேர் பாரீஸில் வசிக்கிறார்கள். பிரான்ஸின் இரண்டாவது பெரிய நகரம் மார்ஸெய்லெஸ் இது பாரீஸின் அளவில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை.

நாட்டின் நிர்வாக, வணிக, கலாச்சார மையம் பாரீஸ்தான். பாரீஸ் தும்மினால் பிரான்ஸுக்கு ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என்பார்கள். ’இன்று உலகின் தலைநகரமாகிவிட்டது பாரீஸ்’’ என்கிறார் அதன் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலாந்த். கொஞ்சம் சோகமாகத்தான் இதைச் சொல்ல வேண்டிய சூழல்.

நீங்கள் ஏதோ ஒரு வேற்று கிரகத்துக்கு பத்து நாட்கள் சென்று வந்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்தப் பத்து நாட்களில் செய்தித் தாள் எதையும் படிக்கவில்லை. (அட, இது யாரையோ நினைவு படுத்துகிறதே!) இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட நகருக்கு கீழே உள்ள வி.ஐ.பிக்கள் விஜயம் செய்கிறார்கள் என்று தெரிய வருகிறது. உங்கள் யூகம் என்னவாக இருக்கும்?

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் அப்பாஸ், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோப், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்டோல்டென் பெர்க், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா - பட்டியல் முடியவில்லை. இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், மேற்கு ஆப்ரிக்கா போன்ற பல நாடுகளின் முக்கியப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருக்கிறார்கள் என்றால் அந்த நிகழ்வு எதுவாக இருக்கும் என்று நினைப்பீர்கள்?

ஒரு நாட்டின் தலைவர் இறந்திருப்பார். அதற்கு அஞ்சலி செலுத்ததான் அந்த நாட்டின் தலைநகருக்கு இத்தனை பேரும் வந்திருப்பார்கள் என்பதுதான் உங்கள் பதிலா? உங்கள் பதிலில் பாதி சரி. இறந்தது நாட்டுத் தலைவர் அல்ல. பத்திரிகையாளர்கள்.

பாரீஸில் நடைபெற்ற அஞ்சலி ஊர்வலத்தில் மேற்படி வி.ஐ.பி.க் களுடன் பொது மக்களும் லட்சக் கணக்கில் திரண்டு வந்திருந்தனர். மேற்கு ஐரோப்பாவில் உள்ள தேசம் பிரான்ஸ். இத்தாலி மற்றும் ஜெர்மனிக்கு மேற்கில் ஸ்பெயினுக்கு வடகிழக்கே அமைந்த நாடு. மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு. இங்கு பாயும் ரைன் நதி அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.

பாரீஸிலிருந்து வெளியாகும் சார்லி ஹெப்டோ என்ற வார இதழின் ஆசிரியரும் அங்கு பணியாற்றிய வேறு பலரும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அல்கொய்தா அமைப்பு இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது.

சார்லி ஹெப்டோ கிண்டலுக்கும் கேலிக்கும் புகழ் பெற்ற ஒரு வார இதழ். (ஹெப்டோ என்றால் வார இதழ் என்று அர்த்தம்). இடதுசாரிப் பார்வை கொண்டது. கிறிஸ்தவம், இஸ்லாம், ஜூடாயிசம் என்று சகட்டுமேனிக்கு எல்லா மதங்கள் மற்றும் பிரபல அரசியல் தலைவர்களையும் அங்கதம் செய்தது இந்த வார இதழ். இஸ்லாமை மட்டுமல்ல கிறிஸ்தவத்தையும் இந்த இதழ் கடுமையாக, நகைச்சுவையாக விமர்சிக்கத் தவறியதில்லை.

பல வருடங்களுக்கு முன் நபிகள் நாயகத்தைப் பற்றி வெளி யிட்ட கார்ட்டூன்களுக்காக தீவிர வாதிகள் 2011-ல் இந்த இதழின் அலுவலகத்தின் மீது வெடி குண்டுகளை வீசினார்கள். அந்த இதழின் இணையதளம் முடக்கப்பட்டது. சார்லி ஹெப்டோ தொடர்ந்து தான் வந்த அதே பாதையில் நடந்தது. (‘பட்டும் திருந்தவில்லை’ என்பதோ ‘அஞ்சாத மனப்போக்கு’ என்பதோ அவரவர் கோணத்தைப் பொறுத்தது).

அல்-காய்தா தீவிரவாதி களுக்கு அதிக எரிச்சலை அளித் திருக்கக்கூடும் என்று கூறப்படுவது 2011 நவம்பரில் வெளிவந்த இதழ். ‘’ஷரியா ஹெப்டோ’’ என்ற தலைப்பில் வெளியானது. ஷரியா என்பது இஸ்லாமியர்களின் ஒரு வகை சட்டம். நபிகள் நாயகம் இந்த இதழின் சிறப்பு ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டது. போதாக் குறைக்கு ‘’இதைப் படித்துவிட்டு சிரிக்காவிட்டால் உங்களுக்கு 100 சவுக்கடி’’ என்று அவர் கூறுவதைப் போலவும் ஒரு கார்ட்டூன்!

ஹராகிரி என்பது இந்தப் பத்திரிகையின் பூர்வஜென்மப் பெயர். ஹராகிரி என்பதும் செப்புகு என்பதும் ஒரே அர்த்தத்தைத் தரும் வார்த்தைகள். ‘வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறப்பது’ என்பது இதன் பொருள். ஜப்பானிய சாமுராய் வீரர்கள், தாங்கள் எதிரிகள் கையில் பிடிபடுவோம் என்றால், தங்கள் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்து விடு வார்கள் (இலங்கை விடுதலைப் புலிகள் சயனைட் குப்பியை வாயில் சரித்துக் கொள்வதுபோல).

‘சிரித்து சிரித்து வயிறே வெடித்துவிட்டது’என்கிறோம் அல்லவா, அந்த அர்த்தத்தில் இந்த இதழ் தனக்கான பெயரைச் சூடிக் கொண்டது. ஆனால் அப்போதைய பிரான்ஸ் அதிபரின் மரணத்தையே கேலி செய்ததைத் தொடர்ந்து அது தடை செய்யப்பட்டது. சுமார் பத்து வருடங் களுக்குப் பிறகு அது சார்லி ஹெப்டோவாக மறுவடிவம் எடுத்தது. பழைய இதழில் பணியாற்றியவர்கள் கிட்டத்தட்ட அப்படியே இதிலும்.

இதன் அலுவலகத்துக்குள் ஜனவரி 8 அன்று நுழைந்த மூன்று முகமூடி நபர்கள் கண்மூடித்தன மாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பத்திரிகை ஆசிரியர் உட்பட ஒரு டஜன் பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முதலில் குறிப்பிட்ட பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தப்பட்டது என்பதைவிட, தீவிரவாதத்துக்கு எதிரான ஊர்வலம் இது என்பது மேலும் பொருந்தும்.

இது தவிர மாட்ரிட், நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களிலும் பெரும் ஊர்வலங்கள் நடந்தன. இந்த நகரங்களில் அல்-காய்தா தீவிரவாதிகள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எக்கச்சக்கம். நவீன சிந்தனைகளுக்கு கம்பளம் விரிக்கும் நாடான இது மிகத் தொன்மையான நாடும்கூட!

பிரான்ஸ் பற்றி நீங்கள் கேள் விப்படாமல் இருந்திருக்க முடி யாது. பிரெஞ்சு ஓபன் பந்தயங்கள், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க். ‘’பள்ளியில் பிரெஞ்சு மொழியை மூன்றாவது மொழியாகத் தேர்ந்தெடுத்தால் மிக அதிக மதிப்பெண்கள் பெறலாம்’’ என்று ஏதோ ஒருவிதத்தில் பிரான்ஸ் நமக்கு அறிமுகமாகியிருக்கும்.

ஜீன்ஸ் அணிந்தவர்கள் எல்லாம் பிரான்ஸை ஒரு கணமாவது நினைக்க வேண்டும். அங்குள்ள ‘டெனிம்ஸ்’ என்ற இடத்தில்தான் ஜீன்ஸ் அறிமுகமானது. திரைப்பட ரசிகர்கள் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவை நினைவு கொள்வார் கள். தவிர, ‘செவாலியே’ சிவாஜி கணேசனை மறக்கலாகுமா?

பிரான்ஸை இன்னமும் அதிகமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தக் காரணங்கள் போதாதா? தவிர, வேறு காரணங்களும் உண்டு.

(இன்னும் வரும்)

பாரீஸ்வரலாற்றுத் தொடர்ஆவணத் தொடர்ஜி.எஸ்.எஸ்

You May Like

More From This Category

More From this Author