Published : 24 Jan 2015 09:34 AM
Last Updated : 24 Jan 2015 09:34 AM

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: 693 வேட்பு மனுக்கள் ஏற்பு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 693 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற இன்று இறுதிநாளாகும்.

டெல்லியில் வரும் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளிடமிருந்து பெறப்பட்ட 923 வேட்புமனுக்களை ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள் அவற்றில் 693 மனுக்களை மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 14-ம் தேதி தொடங்கி, 21-ம் தேதி வரை மொத்தம் 923 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில், முறையான ஆவணங்கள் இல்லாதது உட்பட பல்வேறு காரணங்களுக்காக 230 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 693 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. கடந்த தேர்தலைப் போலவே இம்முறையும் அகாலி தளத்துக்கு 5 இடங்களை ஒதுக்கி கூட்டணியாகக் களமிறங்குகிறது பாஜக. டெல்லியில் பிஹார்வாசிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அம்மாநிலத்தை ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளும் சில வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிபிஐ (எம்.எல்) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. முன்னாள் மத்திய அமைச்சர் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தளம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், சிவசேனா, இந்து மஹா சபா உட்பட பல்வேறு கட்சிகளுடன் சுயேச்சைகளும் போட்டியில் உள்ளனர். வாக்குகள் வரும் பிப்ரவரி 10-ம் தேதி எண்ணப் படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x