Published : 20 Dec 2014 10:05 am

Updated : 20 Dec 2014 10:05 am

 

Published : 20 Dec 2014 10:05 AM
Last Updated : 20 Dec 2014 10:05 AM

உலக மசாலா: மோட்டார் சைக்கிளில் டாட்டூ

போலந்தைச் சேர்ந்த டாட்டூ ஓவியர்கள் டொமாஸ் லெக், கிர்ஸிடோஃப் க்ரோலாக். இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிள் முழுவதும் டாட்டூ வரைந்திருக்கிறார்கள். மோட்டார் சைக்கிள் நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 250 மணி நேரங்கள் செலவிட்டு வரைந்து கொடுத்திருக்கிறார்கள். கடந்த மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற கஸ்டம்பைக் ஷோவில் இந்த மோட்டார் சைக்கிள் இடம்பெற்று, பெஸ்ட் பெயிண்ட் என்ற விருதையும் தட்டிச் சென்றது.

வித்தியாசம் காட்டறதுக்கு எப்படியெல்லாம் மெனக்கெடறாங்க பாருங்க…

பிரிட்டனைச் சேர்ந்த 26 வயது லூக் கேமெரான் தினமும் ஒரு நல்ல காரியம் வீதம் ஓராண்டு முழுவதும் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் சாதாரணமாக இந்தச் செயலை ஆரம்பித்தவருக்கு ஓராண்டு முடிவில் அவருடைய வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது. `சக மனிதர்களைப் பற்றிய அக்கறையை இந்தத் தலைமுறை மறந்துவிட்டது. எனக்குமே இந்தச் சிந்தனையைத் தோற்றுவித்தவள் என் தோழி மெளரா. உலகிலேயே அற்புதமான பெண். அவளைப் போல இதுவரை யாரையும் நான் சந்திக்கவில்லை. உணவு இல்லாதவர்களுக்கு உணவளிப்பாள். பணம் தேவைப்படுகிறவர்களுக்கு பணம் கொடுப்பாள்.

என்ன உதவி கேட்டாலும் கொஞ்சம் கூடத் தயங்காமல் செய்வாள். இவ்வளவுக்கும் அவள் ஒன்றும் மிகவும் வசதியானவள் அல்ல. ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் அவளுக்கு இணை யாருமில்லை. கடந்த ஆண்டு கேன்சரால் இறந்து போனாள். அவள் இறுதிச் சடங்குக்கு 4 ஆயிரம் மக்கள் வந்து, வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். அவள் இழப்பில் இருந்து மீள முடியவில்லை. அன்று முடிவு செய்தேன். தினமும் ஒரு நல்ல காரியமாவது செய்ய வேண்டும் என்று. அதுதான் மெளராவுக்கு நான் செலுத்தும் மரியாதை’ என்கிறார் கேமெரான். இவரின் செயல்கள் இணையதளங்களில் வெளிவந்து பிரிட்டன் முழுவதும் பிரபலமாகிவிட்டன.

சாதாரண வேலையில் இருந்த கேமெரானுக்கு, இன்று பல அறக்கட்டளைகளின் மேனேஜராக வேலை செய்யும்படி அழைப்பு வந்திருக்கிறது. ‘நாம் நல்லது செய்தால் மற்றவருக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்லதே நடக்கும்’ என்கிறார் கேமெரான்.

நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான் கேமெரான்!

நியூயார்க்கில் வசிக்கும் செத் கோஹெனின் பிறந்தநாள் அன்று தான் இந்த யோசனை உதித்தது. செத் கோஹென் என்ற பெயரில் இருப்பவர்களைச் சந்திக்கவேண்டும். ஒரே பெயரில் இருக்கும் ஒவ்வொருவரும் எவ்வளவு தனித்துவம் மிக்கவர்களாக இருக்கிறார்கள், எவ்வளவு தூரம் ஒத்துப் போகிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. உடனே இணையதளத்தில் அதற்கென்று ஒரு பக்கம் ஆரம்பித்தார்.

அமெரிக்காவில் வசிக்கும் பல செத் கோஹென்கள் அவரைத் தொடர்பு கொண்டனர். ஒவ்வொருவரையும் சந்தித்து விஷயங்களைச் சேகரித்தார், புகைப்படங்களை எடுத்தார், செத் கோஹென் பேட்ஜ் அளித்தார். இதுவரை 300 செத் கோஹென்களைச் சந்தித்திருக்கிறார் செத் கோஹென். இந்தத் திட்டம் எதிர்பார்த்ததை விட மிகவும் சுவாரசியமாக இருக்கிறது என்கிறார். அதனால் தன்னுடைய திட்டத்தை அமெரிக்காவுக்கு வெளியிலும் செயல்படுத்த இருக்கிறார்.

தேடல் இல்லாத மனிதனே இல்லை…

1963ம் ஆண்டு க்ளிஃபோர்ட் என்ற பெரிய சிவப்பு நாயை மையமாக வைத்து குழந்தைகளுக்கான புத்தகங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன. இதுவரை 150 புத்தகங்கள் வெளிவந்து, 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, 12 கோடியே 90 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டிருக்கின்றன. இந்த க்ளிஃபோர்ட் கதையை உருவாக்கி, கார்ட்டூனாக வரைந்தவர் நார்மன் பிரிட்வெல். அவர் கதை எழுத ஆரம்பித்தபோது பல முறை புத்தக நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். வீட்டிலும் அவர் வரைவதற்கான போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

கதையையும் மாற்றி பெரிய சிவப்பு நிற நாயையும் உருவாக்கினார் நார்மன். எல்லோருக்கும் நாயைப் பிடித்துப் போனது. அவரது மனைவிதான் க்ளிஃபோர்ட் என்று பெயர் சூட்டினார். அதற்குப் பிறகு க்ளிஃபோர்ட் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. குழந்தைகளின் மனம் கவர்ந்த நார்மன் கடந்த வாரம் மறைந்துவிட்டாலும் க்ளிஃபோர்ட் என்றென்றும் நிலைத்திருக்கும்.

தோல்வியிலிருந்துதான் வெற்றி ஆரம்பிக்குதுனு சொல்லுங்க…

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

உலக மசாலா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author