Published : 27 Dec 2014 11:10 am

Updated : 27 Dec 2014 11:10 am

 

Published : 27 Dec 2014 11:10 AM
Last Updated : 27 Dec 2014 11:10 AM

பாபா ஆம்தே: காந்தியத்தின் பேரொளி

தொழுநோயாளிகளுக்காக பாபா ஆம்தே செய்த சேவைகள் மகத்தானவை.

பாபாவின் நூற்றாண்டையொட்டி இந்த நினைவஞ்சலியைச் செலுத்த நான் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டியதாயிற்று. ‘சமாஜ் பிரகதி சஹாயோக்’ என்ற தன்னார்வ அமைப்பை அவருடன் சேர்ந்து நாங்கள் 10 பேர் ஏற்படுத்தினோம். அநீதி, துயரம், அநித்தியம் ஆகியவற்றுக்கிடையே உற்சாகமாகவும் உத்வேகத்துடனும் ஆக்கப்பூர்வமாக எப்படிச் செயல்பட முடியும் என்பதை எங்களுக்கு அவர் கற்றுத்தந்தார்.

அவருடைய உலகக் கண்ணோட்டம் எப்படி இருந்து என்று நான் சொல்வது கடினம். அவர் எதை நம்பினாரோ அதையே வாழ்க்கையில் கடைப்பிடித்தார், செயல்படுத்திக் காட்டினார். உலக வழக்கப்படி அவர் தன்னுடைய குறிக்கோள்களையும் வழிமுறைகளையும் வகுத்துச் செயல்படவில்லை. ஒரு கவிஞனுக்கு உள்ள சுதந்திரத்துடன் செயல்பட்டார் - அதே சமயம் கர்மயோகியாகவும் திகழ்ந்தார்.

எந்தச் செயலாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவார். அதை எப்படிச் செய்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்க மாட்டார், அந்தச் செயலே அதை அவர் எப்படிச் செய்தார் என்பதைப் பறைசாற்றிவிடும். இலக்கியத்தைக் கையாள்வதிலும் அவர் கைதேர்ந்தவர். அவருடைய மராட்டிய மொழிக் கவிதைகள் நல்லதொரு உதாரணம். உரைநடையாக இல்லாமல் புதிர்கள், உருவகங்கள், வேதாந்தங்களைக் கொண்டிருக்கும்.

இன்ன வகையில்தான் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கருதியதில்லை. வகைப் படுத்தலை அவர் விரும்பவில்லை. நிர்வாக அமைப்பு எந்தவொரு நிறுவனத்தையும் அடக்கியாளுவதை அவர் விரும்பியதே இல்லை. ஒரு பிரச்சினைக்குத் தீர்வு உடனடியாகச் செயல்படுவதுதான் என்று கருதினார். நிகழ்காலத்தில் வாழ்வது, நம்மைச் சுற்றி நடப்பவற்றுக்கு ஏற்ப வினைபுரிவது என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். இதில் அவர் புத்தரிடம் தனக்கிருந்த ஆழ்ந்த நம்பிக்கையின்பால் செயல்பட்டார். அவருடைய அடக்கம் என்பது தார்மிகமானது. மனித குலத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வைக் கூறிக் கொண்டிருக்கவில்லை. புதிய விடியலுக்கான தேவ தூதன் என்றும் தன்னைக் கருதிக்கொண்டதில்லை.

காரியசாத்தியமான லட்சியவாதம்

இயற்கை உலகின் தாளகதியைக் கவனியுங்கள், அதற்கேற்றபடி உங்களுடைய தலையீடுகள் அமையட்டும் என்பார். இயற்கையை அடக்கியாள வேண்டும் என்ற 20-ம் நூற்றாண்டு சிந்தனையை அவர் கடுமையாக விமர்சித்தார். இயற்கையில் கிடைப்பவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், அதை ஒரேயடியாகச் சுரண்டிவிடாமல் தொடர்ந்து பயன்தரும் வகையில் பாதுகாக்க வேண்டும் என்பார். நர்மதை நதி பள்ளத்தாக்கு வளர்ச்சி திட்டத்தை அந்தக் கோணத்தில்தான் அவர் பார்த்தார். நர்மதைக்குக் குறுக்கே மிகப் பெரிய நீர்த்தேக்கங்களைக் கட்டி வனவளங்களை அழிப்பதுடன் இயற்கையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் அவர் எதிர்த்தார். நதி அதன் போக்கில் ஓட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதே சமயம் அவர் அடிப்படைவாதியோ பழமைவாதியோ அல்ல. அடிப்படைவாதத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர் கடுமையாகச் சாடினார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திலும் புதிதுபுதிதாக எதையாவது சோதனை செய்து கொண்டேயிருக்க விரும் பினார். குழந்தைகளிடமும் அறிவியல் அறிஞர்களிடமும் காணப்படும் புதிய விஷயங்களை ஆராயும் ஆர்வம் அவரிடம் மிகுந்து காணப்பட்டது. ஒரு யோகியைப் போலவே தன்னுடைய லட்சியத்திலேயே எப்போதும் கவனமாக இருப்பார். அதைச் செய்துமுடிக்க முழுக் கவனத்தையும் செலுத்துவார். தான் செய்ய விரும்புவதைச் செய்து முடிப்பதற்கான வழிகளையும் உத்தி களையும் தானே கண்டுபிடிப்பார்.

முழுக்க முழுக்க இயற்கை முறையிலான வேளாண்மையே செய்யப்பட வேண்டும் என்று கூறப் படுவது குறித்து கேட்டால், இயற்கை வேளாண்மை தானாகவே இயற்கை எய்திவிடும் என்று பதில் அளிப்பார். கட்டுப்பெட்டியாகச் சிந்திக்க மாட்டார். ஒவ்வொரு பிரச்சினையையும் எப்படித் தீர்க்க முடியும் என்றுதான் யோசிப்பார். தன்னுடைய கருத்தை ஏற்காதவர்களுடன்கூட பேசி, ஒரு தீர்வைக் காண விரும்புவார். நர்மதை நதியைக் காப்பாற்றுவதற்கும் அப்படித்தான் விவாதித்து முடிவு காண விரும்பினார். ஆனால், அது தோல்வியில்தான் முடிந்தது.

மண்ணுக்கேற்ற எளிமை

எளிமையாக வாழ விரும்பினாரே தவிர, வாழ்க்கைக்கு அவசியமான சிலவற்றைக்கூட எளிமை என்ற பெயரில் துறக்க அவர் விரும்பவில்லை. அவருடைய நகைச்சுவை உணர்வும், சிரிப்பும் எல்லோரையும் தொற்றிக்கொள்ளும். நமக்குள் எரியும் அக்கினி எரிவதற்கு வழிகாட்டியாக இருந்தாரே தவிர அந்த நெருப்பை அப்படியே அணைத்துவிட முயன்ற வரில்லை. 65 ஆண்டுகளுக்கு முன்னால் தான் அமைத்த ஆசிரமத்துக்கு ஆனந்த வனம் என்று பெயரிட்டார். அந்தப் பெயரே அவருடைய எண்ணப் போக்குக்கு அற்புதமான சான்று.

வெவ்வேறு வகையிலான உடல் திறனுள்ளவர்கள் அந்த ஆசிரமத்தில் இருந்தார்கள். அங்கிருந்தவர்களுக்கு சுயமரியாதையும் கண்ணியமும்தான் முக்கியம். நோய்வாய்ப்பட்டோ, பிரச்சினைக்கு ஆளாகியோ அந்த ஆசிரமத்துக்கு வருகிறவர்கள்கூட அந்த நோய்க்கு சிகிச்சை முடிந்து உடல் தேறிவிட்டால் அங்கேயே தங்கி, பயனுள்ள வேலைகளை ஆசிரமத்துக்காகச் செய்யத் தொடங்கிவிடுவார்கள். ஆசிரமவாசிகள் தங்களுக்காகவும் விற்பனைக்காகவும் கைவினைப் பொருள்களைத் தயாரிக்கின்றார்கள்.

ஆசிரமவாசிகள் ஒருவருக்கொருவர் அன்பையும் அக்கறையையுமே வெளிப்படுத்துகின்றனர். அங்கு பாரபட்சமே கிடையாது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அங்கே இருகரம் நீட்டி வரவேற்கப்படு கிறார்கள்.

தொழுநோயாளிகள், வன நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடிகள், சமூகத்தால் புறக் கணிக்கப்பட்ட ஏழைகள், கைவிடப்பட்டவர்கள் என்று பலதரப்பட்டவர்களும் அங்கே வருகிறார்கள். சித்தாந்த ரீதியாக தன்னோடு ஒத்துப்போகாதவர்களைக்கூட அவர் தன்னுடைய நண்பர்களாகவே கருதினார். எனவே, எல்லாவிதமான சித்தாந்தவாதிகளும் அவருக்கு நண்பர் களாகவே இருந்தார்கள்.

துணிச்சலே ஆன்ம விடுதலை

பாபா இளம் வயதிலிருந்தே துணிச்சல் மிக்கவர். அச்சம் என்பதே அவருக்கு ஏற்பட்டதில்லை. ஒரு நாள் வேலை முடிந்து மாலை நேரம் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. வழியில் சாலையோரத்தில் ஏதோ ஒரு துணிக்கந்தல் மூட்டை கிடந்தது. முதலில் அந்த மூட்டையை அவர் சரியாகக்கூடப் பார்க்கவில்லை. இரண்டாவது முறை பார்த்தபோதுதான் அது மனிதன்தான், மூட்டையல்ல என்று அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் சென்று குனிந்து பார்த்தார். தொழுநோய் முற்றிய நிலையில் கீழே விழுந்துகிடந்தார் துளசி ராம் என்ற அந்த நோயாளி. உடல் அழுகி, துர்நாற்றம் வீசியது. மூக்கு இருக்க வேண்டிய இடத்தில் 2 ஓட்டைகள் மட்டுமே தெரிந்தன. கை, கால்களில் விரல்கள் இல்லை. கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் புண் களும் புழுக்களும்தான் இருந்தன. இந்த ஆளைப் பார்த்துக்கொண்டிருந்தால் நமக்கும் நோய் தொற்றி விடும் என்று அஞ்சி உடனே அங்கிருந்து எழுந்து வேகமாக ஓடினார்.

அவர் ஓடினாலும் அவருடைய எண்ணங்கள் அந்த இடத்தை விட்டு ஓட மறுத்தன. உதவிக்கு ஒருவரும் இல்லாமல் கொட்டும் மழையில் நனைந்து கொண்டிருக்கும் அந்தத் தொழுநோயாளிக்கு யார் உதவி செய்வார்கள்? மீண்டும் அந்த இடத்துக்குச் சென்று மூங்கில் கம்புகளால் சிறு கொட்டகை அமைத்து மழை நீர் அவர் மீது விழாமல் இருக்கச் செய்தார். பிறகு உணவு கொடுத்து அவரைப் பார்த்துக் கொண்டார். அவர் ஆம்தேவின் கைகளிலேயே உயிரை விட்டார். அன்றிலிருந்து அவருடைய வாழ்க்கையே தடம் மாறியது. அடுத்த 6 மாதங்களுக்கு அவருடைய நினைப்பே அவரை வாட்டியது. “எங்கே அச்சமிருக்கிறதோ அங்கே அன்பு இல்லை; எங்கே அன்பு இல்லையோ அங்கே கடவுள் இல்லை” என்ற வாசகம் அவர் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. இனி தொழுநோயாளிகளுக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பது என்ற முடிவை எடுத்தார். மற்றவர்களுக்கு உதவுவதற்காக அல்ல, தனக்கேற்பட்ட அச்சத்தைப் போக்குவதற்காகவே அப்படிச் செய்தார்.

- தி இந்து (ஆங்கிலம்), தமிழில்: சாரி

பாபா ஆம்தேகாந்தியம்தொழுநோயாளிகள்சேவைகள்

You May Like

More From This Category

More From this Author