Last Updated : 28 Nov, 2014 10:23 AM

 

Published : 28 Nov 2014 10:23 AM
Last Updated : 28 Nov 2014 10:23 AM

ஹைதராபாத் விமான நிலைய பெயர் விவகாரம் - காங்கிரஸ் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு

ஹைதரபாத் உள்நாட்டு விமான நிலையத்துக்கு பெயர் வைத்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை உணவு இடைவேளைக்கு முன்னதாக மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி பெயரை அகற்றிவிட்டு வேறு பெயர் வைத்துள்ளதாக நடத்தப்பட்ட இந்த அமளி காரணமாக அவை 3 முறை ஒத்தி வைக்கப்பட்டது. பூஜ்ய நேரத்தின்போது ஒரு தடவையும் கேள்வி நேரத்தின்போது 2 தடவையும் ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்று காலையில் அவை கூடியபோது காங்கிரஸ் உறுப்பினர் வி.ஹனுமந்த ராவ் (காங்கிரஸ்) இந்த பிரச்சினையை எழுப்பினார். ஹைதராபாத் விமான நிலையத்தின் ஒரு பகுதி என்.டி.ராமராவ் உள்நாட்டு விமான நிலைய முனையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக ஆளும் கட்சி கையாளும் தந்திரம் இது என்று அவர் குற்றம் சாட்டி பேசினார்.

இதைத்தொடர்ந்து அவரது கட்சியின் பிற உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பியவாறு கையில் பதாகைகளை ஏந்தியபடி அவையின் மையப் பகுதிக்கு விரைந்தனர். இந்நிலையில் அவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் குறுக்கிட்டு கூறியதாவது:

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நேசிப்பது நீங்கள் ஒருவர் மட்டும் அல்ல. இந்தப் பிரச்சினையை முன்னாள் அமைச்சர் ஆனந்த் சர்மாவும் (காங்கிரஸ்) புதன்கிழமை எழுப்பினார். அப்போது அதற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளித்துவிட்டார்.

எனவே, பூஜ்ய நேரத்தில் நீங்கள் மீண்டும் அந்தப் பிரச்சினையை எழுப்ப முடியாது. பிரச்சினை எழுப்ப நினைத்தால் அதற்கு உரிய வகையில் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என குரியன் தெரிவித்தார்.

பல முறை அறிவுறுத்தியும் அதற்கு பலன் கிடைக்காததால் அவையை பூஜ்ய நேரத்தின்போது 10 நிமிடத்துக்கு குரியன் ஒத்தி வைத்தார்.

அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி தலைமையில் அவை மீண்டும் கூடியபோதும், காங்கிரஸ் உறுப்பினர்களின் அமளி தொடர்ந்ததால் மீண்டும் 10 நிமிடத்துக்கு அவையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

மறுமுறை அவை கூடியபோதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது நிலையிலிருந்து இறங்கி வராமல் பிடிவாதமாக கூச்சலில் ஈடுபட்டனர். இதற்கு செவி சாய்க்காமல் கேள்வி நேரத்தைத் தொடர்ந்து நடத்தினார் அவைத்தலைவர்.

கூச்சல் குழப்பத்தால் ஒன்றும் புரியவில்லை என பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் புகார் கூறவே அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சியை நிறுவிய தலைவர் நடிகர் என்.டி.ராமாராவ். அந்த கட்சி ஆந்திரத்தில் தற்போது ஆட்சி புரிகிறது. மேலும் மத்தியில் உள்ள பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கிறது.

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதிராவ் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் ஆவார். விமான நிலைய பெயர் விவகாரத்தில் கடந்த இரு தினங்களாக காங்கிரஸ் கட்சி அமளி செய்வதால் கேள்வி நேரம் வீணாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x