Published : 02 Nov 2014 01:18 PM
Last Updated : 02 Nov 2014 02:19 PM
திமுகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் துளியும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
காங்கேயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஈரோடு கணேசமூர்த்தி இல்ல விழாவில் அவர் பங்கேற்று பேசும்போது, "திமுகவுடன் கூட்டணி என்று ஒருபோதும் கூறியது கிடையாது" என்றார்.
மேலும், "கூட்டணி தொடர்பாக ஊடகங்களில்தான் செய்திகள் வெளியானது. ஸ்டாலின் உடனான சந்திப்பு அரசியல் நாகரீகம் கொண்டது மட்டுமே" என்றார் வைகோ.
முன்னதாக, வரும் 2016 சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமையவுள்ளதாகவும், அதில் மதிமுக, பாமக சேரும் என்றும் தகவல்கள் வெளியாகின. இதற்கு தொடக்கமாக பாமக நிறுவனர் ராமதாஸின் இல்லத் திருமண நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, கடந்த 30-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த ராமதாஸ் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் சந்தித்து பேசினர். பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, நிருபர்களிடம் வைகோ கூறும்போது, 'ஸ்டாலின் என்னை சந்தித்தது அரசியல் நாகரிகத்துக்கு சான்று' என்றார். இதேபோல், மு.க.ஸ்டாலினிடம் 'இது கூட்டணிக்கு அடித்தளமா?' என்று நிருபர்கள் கேட்டபோது, 'உங்கள் விருப்பம் அதுவென்றால் மகிழ்ச்சி' என்று பதில் அளித்தார்.
இதன் தொடர்ச்ச்சியாக, கோபாலபுரம் இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்தச் சந்திப்பு புதிய கூட்டணிக்கு தொடக்கமாக இருக்குமா? என்று கேட்டதற்கு, "தொடக்கமாக இருந்தால் மகிழ்ச்சி அடைவேன். புதிய அணி உருவானால், அந்த அணி பற்றி திமுக செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுத்தால் மகிழ்ச்சியுடன் அதை வரவேற்பேன்" என்றது குறிப்பிடத்தக்கது.