Published : 29 Oct 2014 10:58 am

Updated : 24 Nov 2014 14:23 pm

 

Published : 29 Oct 2014 10:58 AM
Last Updated : 24 Nov 2014 02:23 PM

குருதி ஆட்டம் 7 - ஆப்ப நாட்டு ‘மசாய்’

7

ஆப்ப நாட்டு ‘மசாய்’

பினாங்கு தீவை, ‘புலாவ் பினாங்’ என்பார்கள்.


‘புலாவ்’ என்றால் மலாய் மொழியில் ‘பாக்கு’. கழுகுப் பார்வையில் கொட் டைப் பாக்கு வடிவில் படுத்திருக்கும் தீவு. கரும்பச்சை நிறக் காடுகளால் போர்த்தப்பட்ட சொர்க்க பூமி. சீனர்களும் மலாய்க்காரர்களும் தமிழர்களும் பிணைந்த தீவு. மங்கோலிய ஜாடை நிறைந்த மலாய்க்காரர்களே பூர்வ தீவுக்காரர்கள்.

துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பல், பினாங்கு தீவை விட்டு வெகுதூரம் வந்திருந்தது. கண்களை விட்டு, மெல்ல மெல்ல விலகிப் போய்க் கொண்டிருந்தன கரும்பச்சை நிலப் பரப்புகள். காட்சிக்கு எட்டிய தூரம் கடல் விரிந்திருந்தது.

அதிசயப் பேருலகை அடி மடியில் மறைத்து வைத்துக் கொண்டு, கருநீல நீராய்த் திமிறிக் கிடக்கும் கடலை, கீறிப் பிளந்து போகும் கப்பலின் மேல் தளத்தில் நின்றிருந்தான் டி.எஸ்.பி. ஸ்காட். வாயிலிருந்து வெளியேறியதும் கடற்காற்றில் கலந்தது சுருட்டுப் புகை. கடல் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தான்.

“ஓய்வுக்கு பின், லண்டன் வாழ்க்கை சலிப்பூட்டுகிறது. அடிமை தேசங்களுக்கு சுதந்திரம் கொடுத்து தொலைத்ததால், நம்மைப் போன்றவர்கள் லண்டனுக்கு மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப வேண் டியதாயிற்று. தேட்டமின்றி ரத்தம் குடித்த நாக்கு, வீட்டு ரொட்டிகளை சீண்ட மாட்டேன் என்கிறது.” புகையை விட்டான்.

அருகில் நிற்கும் வெள்ளை அதிகாரி சைமன், “எனக்கும் லண்டனில் இருக்கவே பிடிக்கவில்லை. உலகம் சுற்றக் கிளம்பிவிட்டேன்” என்றான்.

“மிஸ்டர் சைமன்! நீங்கள் பிரிட்டானிய நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்தவர். அறைக்குள் அமர்ந்து, காகித உத்தர வுகள் மூலம் அடிமைகளைக் கண்காணித் தவர். என் பணி வேறு வகை. நாடு, தேசங்கள் சுற்றி நரவேட்டை ஆடியவன் நான். பிரிட்டிஷ் காலனிய நாடுகளில், எங்கெல்லாம் கலவரக்காரர்கள் முளைக் கிறார்களோ, அங்கெல்லாம் கப்பல் ஏறிப் போய், சுட்டுச் சுடுகாடாக்கி முடித்ததும் அடுத்த வேட்டைக்கு அனுப்பப்பட்டவன்.”

ஊருக்கு வடக்கே, கண்மாய்க்கரை இறக்கத்தில் இருளப்பசாமி கோயில். படிகளுடன் கூடிய எட்டடி உயர பீடம். உச்சியில் நின்றார் இருளப்பசாமி. அள்ளி முடிந்த கொண்டை. வலது கை ஓங்கிய அரிவாள். இடதுகை அணைந்த சிம்ம வாகனம். திரண்ட புருவம். தெறிக்கும் விழிகள். கூர்த்த மூக்கு. கொடுவாள் மீசை.

எந்த தலைமுறையில் இந்தக் கோயில் உருவானது என எவனுக்கும் தெரியலே. காவல்காரன்பட்டியில் இருந்து பிடிமண் எடுத்து வந்து கோயில் உருவானது என சொல்லி வைத்துவிட்டு பெருசுகள் செத்துப் போனார்கள்.

திருவிழா சாட்டி, காப்புக் கட்டிய திலிருந்து ஊரே பரபரத்து திரிந்தது. பொழுது விடியவுமே, கொட்டுக்கார பாலு கூட்டம் காற்சலங்கை மணி கட்டி, இடுப்புக்கொட்டுச் சத்தத்தோடு, ஊரைக் கிளப்பி விட்டுவிடுவார்கள். தெருத் தெருவாய்… சந்து சந்தாய்… மாவிலைத் தோரணம், கீற்றுப் பந்தல், ரேடியோ சத்தம். கணக்குப்பிள்ளை ரத்னா பிஷேகம் மேற்பார்வையில் அரண் மனைக் காசு, தெருவெல்லாம் ஓடுது!

‘அரண்மனை’ன்னா அரண்மனை தான்! காசை அள்ளி எறியிறாரே…’ ஊரே வாய்ப்பாறியது.

ஸ்காட்டை ஓரக் கண்ணால் கோதினான் சைமன். “மிஸ்டர் ஸ்காட்! போன நாடுகளில் எல்லாம் நரவேட்டை மட்டும்தான் நடந்ததா? இல்லை… ‘அந்த’ வேட்டையும்…” உதட் டோரம் இளித்தான்.

கடற்காற்றுச் சுகம், உள் ரகசியங்களை சொல்லத் தூண்டியது. நெஞ்சு நிறைய மூச்சுக் காற்றை இழுத்து விட்ட ஸ்காட், வானும் கடலும் சேரும் அரூபக் கோட்டை கூர்ந்து பார்த்தான்.

“அதில்லாமல் எப்படி? லண்டனை விட்டு, தனி ஆளாய் கிளம்புபவன், வீடு திரும்ப ஆண்டுக் கணக்காகும். போகிற இடங்களில் புழங்கிக் கொள்ள வேண்டியதுதான்.” பழைய நினைவுகளில் திளைத்தான்.

சைமன் கிளுகிளுத்தான்.

பேச்சுவாக்கில் அணைந்து போன சுருட்டை, மறுபடியும் பற்ற வைத்தான் ஸ்காட். புகையை இழுத்து, காற்றில் ஊதி னான். “ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டில், எனக்கு ஒரு மகள் இருக்கி றாள். அவளுடைய தாய் ‘மசாய்’ இனத்தைச் சேர்ந்தவள்.”

ஸ்காட்டை விழி அகல பார்த்தான் சைமன்.

“ஆப்பிரிக்க ‘மசாய்’ இனம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா சைமன்? உலக நாட்டுச் சிங்கங்களிலேயே ஆப்பி ரிக்கச் சிங்கங்கள் கொடூரமானவை. அந்தச் சிங்கங்கள், இந்த ‘மசாய்’ இனத்தவரைக் கண்டு பதறி ஓடும். இவர் கள் சிங்கத்தைத் துரத்தி ஓடுவார்கள்…” நிறுத்தினான்.

“சிங்கத்தைத் துரத்தியவள், என் வெள் ளைத் தோல் மயக்கத்தில் விழுந்து விட்டாள்.” குறுஞ்சிரிப்பு சிரித்தான்.

“அப்புறம் கீழைநாடுகளில்… இலங்கையில் ஒரு மகன் இருக்கிறான்.”

“இலங்கையிலுமா? இந்தியக் கப்பலில் செல்லுகிறீர்களே… அங்கும் வாரிசு உண்டோ?”

“இருந்திருக்கும். எங்கே விட்டான் அந்தக் காதகன்?”

“எவன்?”

“ஆப்பிரிக்க ‘மசாய்’போல்… இவன் ஆப்பநாட்டு ‘மசாய்’. அவனைக் கொன்றொழிப்பதற்குள் என் ரத்தம் சுண்டிப் போனது. விட்டிருந்தால் வெள்ளை ஆதிக்க வேரை வெட்டிச் சாய்த்திருப்பான். ‘ரணசிங்கம்’ அவனது பெயர். அவனுடைய மகனைக் கூட இந்த மலேசியத் தீவுக்குத்தான் நாடு கடத்திவிட்டேன்.”

அடுத்த கேள்வியை சைமன் யோசித்துக் கொண்டிருக்க, ஸ்காட் தொடர்ந்தான். “லண்டன் வேல்ஸ் இளவரசர், நம்மைப் போன்ற நாடு சுற்றிகளுக்கு சிறப்பான ஒரு சலுகையை வழங்கி இருந்தார். அடிமை தேசங்களை அடக்கப் போகிறவர்களுக்கு, அங்கங்கு பிறக்கும் எந்த இனத்துக் குழந்தையானாலும் அது… பிரிட்டிஷ் பிரஜையே! ‘வெள்ளை ரத்தம் ஓடும் குழந்தைகள் எல்லாம் வேல்ஸ் தேசத்துக் குழந்தைகளாகவே வளர்க்கப்பட வேண்டும்’ என்பது கிரேட் பிரிட்டனின் உத்தரவு. இலங்கையில் பிறந்த என் மகன், சென்னை மாகாணத்து வெலிங்டன் கான்வென்டில் வெள்ளைக்காரனாகவே வளர்கிறான்!” பெருமிதத்தோடு சொன்னான் ஸ்காட்.

கண்களை விட்டு பினாங்கு தீவு மறைந்துவிட்டது. ஸ்காட்டின் பிடறியில் பதிந்திருந்த ஊமையன் துரைசிங்கத்தின் கண்கள் அகலவே இல்லை.

- குருதி பெருகும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:
irulappasamy21@gmail.com

தொடர்குருதி ஆட்டம்வேல ராமமூர்த்திபுதன் சமூகம்

You May Like

More From This Category

More From this Author