Published : 07 Nov 2014 11:34 AM
Last Updated : 07 Nov 2014 11:34 AM

கிரானைட் குவாரிகள் விவகாரம்: சகாயம் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

கிரானைட், மணல் உள்ளிட்ட கனிம குவாரிகளின் செயல்பாடுகள் தொடர்பாக ஆராய ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நியமனம் செய்யப்பட்டதற்கான அரசாணை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்திருந்தார். ‘ஏற்கனவே நான் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிரானைட், மணல் மற்றும் பிற குவாரிகளின் செயல்பாடுகள் தொடர்பாக ஆராய ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்தை நியமிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான தமிழக அரசின் மறுசீராய்வு மனுவை கடந்த அக்டோபர் 28-ம் தேதி தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், சகாயம் குழுவுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் 4 நாட்களுக்குள் செய்துதரவேண்டும் என்று அந்த உத்தரவில் கூறியிருந்தது. எனினும் இதுவரை இதுதொடர்பாக எந்த ஒரு அரசாணையும் தமிழக அரசு பிறப்பிக்கவில்லை. ஆகவே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத காரணத்தால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்கான நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும்’ என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழு விசாரணைக்கு அனுமதி வழங்கி நவம்பர் 5-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்த அரசுத் தரப்பினர், அது தொடர்பான நகலையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x