Published : 03 Nov 2014 09:23 AM
Last Updated : 03 Nov 2014 09:23 AM
கும்பகோணம் மகாமக குளத்தைச் சுற்றி சேதமடைந்த கோயில் சுவர் மற்றும் மண்டபங்கள் விரைவில் சீரமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு, கும்பகோணம் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள 69 திருக்கோயில்கள், 12 கோடி ரூபாய் செலவில் செப்பனிடப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார்.
இதன்படி, காசி விஸ்வநாத சுவாமி கோயிலுடன் இணைந்த மகாமக குளத்தைச் சுற்றியுள்ள சோடச மகாலிங்கசுவாமி கோயில்கள் உட்பட 69 கோயில்களை செப்பனிடும் பணிகளுக்காக ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் கோரப்படவுள்ளன.
இந்நிலையில், மகாமக திருக்குள சீரமைப்புப் பணிக்கு, 72 லட்சம் ரூபாய் சுற்றுச்சூழல் துறையிலிருந்து, 2014ம் ஆண்டு ஜனவரியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
மகாமக குளத்தை சுற்றியுள்ள 16 சிவலிங்கங்கள் அமைந்துள்ள கோயில்களின் சன்னதிகளை, செப்பனிட 19.38 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்படவுள்ளது. இந்நிலையில், மகாமக குளத்தை சுற்றியுள்ள கோயில்களில் ஒன்றான முகுந்தேஸ்வரர் சன்னதியில் உள்ள கருங்கற்களால் கட்டப்பட்ட பதினாறுகால் மண்டபத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடுங்கை அமைப்பு 50 சதுர அடி பரப்பளவில், சனிக்கிழமை எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது.
இந்த கட்டுமானம், 100 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. தற்போது பெய்யும் தொடர் மழை காரணமாக ஈரப்பதத்தால் இது இடிந்து விழுந்துள்ளது. பதினாறுகால் மண்டபத்தின் கொடுங்கையில் ஏற்பட்ட இடிபாட்டை உடனடியாக பழமை மாறாது சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம், நடன கோபாலன் தெருவிலுள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் ஒரு தனிப்பட்ட சமுதாயத்தின் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் உள்ள பொதுக் கோயிலாகும். இந்தக் கோயில் முன்பாக இருந்த மண்டபம் ஒன்றும் ஸ்திரத்தன்மை இழந்து தொடர் மழையின் காரணமாக இடிந்துள்ளது. இம்மண்டபத்தையும் சீரமைக்க அரசு விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.