Published : 12 Nov 2014 10:43 AM
Last Updated : 12 Nov 2014 10:43 AM

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை ராஜபக்சே மன்னிக்கத் தயார்

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை அதிபர் ராஜபக்சே மன்னிக்கத் தயாராக இருப்பதாக, இலங்கை அமைச்சர் பிரபா கணேசன் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.

அதாவது, இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், மீனவர்கள் தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதிருந்தால் தான் அவர்களை மன்னிக்கத் தயாராக இருப்பதாக ராஜபக்சே தெரிவித்ததாக அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

"தன்னால் மீனவர்களை மன்னித்து 2 அல்லது 3 நாட்களில் விடுதலை செய்ய முடியும், நீதிமன்ற மேல்முறையீடு செய்தால் 6 மாதங்கள் வரை ஆகலாம். என்று அதிபர் ராஜபக்சே தெரிவித்தார்” என்று அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

மேலும், தனது இந்த முடிவை, இந்திய தூதரகத்திற்கும் கூறிவிடுமாறு தன்னிடம் கூறியதாக அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அமைச்சர் பிரபா கணேசன் இந்தத் தகவலை தங்களிடம் தெரிவித்ததாகக் கூறினர். இது குறித்து அடுத்த கட்ட முடிவு இன்று மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதையடுத்து திடீரென இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மன்னிப்பது பற்றி ஏற்கெனவே ராஜபக்சே இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான உரையாடலில் பேசியுள்ளதாகவும், "இந்திய தூதரகம் தேவையில்லாமல் மேல்முறையீட்டிற்காக பெரிய தொகையை செலவழிக்கிறது” என்றும் ராஜபக்சே கூறியதாக அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x