Published : 29 Oct 2014 09:49 AM
Last Updated : 29 Oct 2014 09:49 AM

சுற்றுச்சூழலை நிராகரிப்பது இந்திய பண்பாட்டின் முரண்பாடு: ஜெய்ராம் ரமேஷ் கருத்து

சுற்றுச்சூழலை பாதுகாக்காமல் நிராகரிப்பது இந்திய பண்பாட்டின் முரண்பாடாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ஜெய்ராம் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

இந்திய பண்பாட்டில் நதிகளை, விலங்குகளை, மலைகளை கடவுள்களாக பாவித்து தினமும் தொழுகிறார்கள். ஆனால், அதே நேரம் சுற்றுச்சூழலை நிராகரித்தும் வருகிறோம். ஒரு மலையை காப்பதா அல்லது அந்த மலையில் கனிமங்கள் தோண்டுவதா என்றால், மலையை தோண்டுவதற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கான மரியாதை நமது பண்பாட்டில் தோன்றியதற்கான வேர்களை கண்டறிந்து, அதை புதுப்பிக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள கோயில் காடுகள் இன்று ஆபத்தான நிலையில் உள்ளன. பொருளாதார வளர்ச்சியை மட்டும் கவனத்தில் கொண்டு இயற்கையை கைவிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கலந்து கொண்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசும்போது, “ஏற்கெனவே இருக்கும் கோயில் காடுகளை பராமரிப்பதோடு, புதிய காடுகளை உருவாக்கவும் வேண்டும்” என்றார். மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலர் அசோக் லவாசா கூறும்போது, “மக்கள் சூற்றுச்சூழல் மீது கொண்டிருக்கும் பக்தியை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளாக மாற்ற வேண்டும்” என்றார். இதுவரை 52 கோயில் காடுகளை மீட்டுள்ள சி.பி.ஆர். மையத்தின் சார்பாக ’இந்தியாவின் கோயில் காடுகள்-ஒரு தொகுப்பு’ மற்றும் ‘சுத்தமான இந்திய தேசத்துக்கான ஒரு பசுமை யாத்திரை’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள என்.எஸ்.என். மெட்ரிக் பள்ளிக்கு சிறந்த பசுமை பள்ளி விருது வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x