Published : 25 Oct 2014 03:49 PM
Last Updated : 25 Oct 2014 03:49 PM

பால் விலை உயர்வை முற்றிலுமாக ரத்து செய்க: ராமதாஸ்

மக்களின் சுமையை உணர்ந்து பால் விற்பனை விலை உயர்வை தமிழக அரசு முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையும், விற்பனை விலையும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படும் என்று தெளிவற்ற அறிவிப்பை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.

பால் கொள்முதல் விலையை எருமைப்பாலுக்கு லிட்டருக்கு 9 ரூபாயும், பசும்பாலுக்கு 7 ரூபாயும் உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று நானும் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். நீண்ட தாமதத்திற்குப் பிறகு பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ள தமிழக அரசு, உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றாமல் அரைகுறையாக நிறைவேற்றியிருக்கிறது.

மேலும், ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் பால் விற்பனை விலையையும் உயர்த்தியிருக்கிறது. பால் விற்பனை விலை குறித்த அறிவிப்பையும் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெளிவாக வெளியிடவில்லை. சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்படும் என்று பொத்தாம் பொதுவாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அப்படியானால், தரப்படுத்தப்பட்ட பால், ஃபுல்கிரீம் பால் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படாது என்று அர்த்தமா? அல்லது அனைத்து வகையான பாலின் விற்பனை விலையும் சராசரியாக லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படும் என்று அர்த்தமா? என்பது தெரியவில்லை. சமன்படுத்தப்பட்ட பால் அட்டை விலை மட்டும் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படும் என்பதை மட்டும் அரசு அறிவித்திருப்பதைப் பார்க்கும் போது, மற்ற வகை பாலின் அட்டை விலையும், அனைத்து வகை பாலின் விற்பனை விலையும் இன்னும் கூடுதலாக உயர்த்தப் பட்டிருக்குமோ? என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது. பால் விற்பனை விலை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு வெளிப்படையாக இல்லை என்பதையே இந்த அறிவிப்புக் காட்டுகிறது.

ஒருவேளை அனைத்து வகையான பாலின் விலையும் சராசரியாக லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டு இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது தமிழக மக்களால் தாங்க முடியாத சுமையாகும். இந்த விலை உயர்வுக்குப் பிறகு சமன்படுத்தப்பட்ட பாலின் விலை லிட்டருக்கு ரூ.37 ஆகவும், தரப்படுத்தப் பட்ட பாலின் விலை லிட்டருக்கு ரூ.41 ஆகவும், ஃபுல்கிரீம் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 45 ஆகவும் இருக்கும். இவை தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான தனியார் பால் வகைகளின் விலையை விட அதிகமாகும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 19.11.2011 அன்று அனைத்து வகை பால்களின் விலை லிட்டருக்கு ரூ.5.50 முதல் ரூ.9.50 வரை உயர்த்தப்பட்டன. அதன்பின் மூன்று ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், பால் விலை லிட்டருக்கு மீண்டும் ரூ.10 உயர்த்தப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை பால் விலை லிட்டருக்கு அதிகபட்சமாக ரூ. 19.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுவரை எந்த ஆட்சியிலும் மூன்றரை ஆண்டுகளில் பால் விலை இந்த அளவுக்கு மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டதில்லை. மக்களை பாதிக்கும் பால் விலை உயர்வுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் போது அதை சமாளிப்பதற்காக விற்பனை விலையை லிட்டருக்கு ஒரு ரூபாயோ அல்லது இரண்டு ரூபாயோ உயர்த்துவதில் தவறில்லை. இவ்வாறு குறைந்த அளவில் விலை உயர்த்தப்படும்போது மக்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. ஆனால், ஒரே தடவையில் லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தினால், தினமும் ஒரு லிட்டர் பாலை பயன்படுத்தும் குடும்பத்திற்கு மாதம் ரூ.300 கூடுதல் செலவாகும்; பாலுக்காக மட்டும் ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ. 1350 வரை செலவிட வேண்டியிருக்கும். இதை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் சமாளிக்க முடியாது. ஆவின் பாலில் ஆட்சியாளர்களின் ஆசி பெற்ற ஆளுங்கட்சிக்காரர் ஒருவர் கலப்படம் செய்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளார். இதையெல்லாம் தடுத்தாலே பாலை ஏற்கனவே இருந்ததைவிட குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும். அதை விடுத்து பால் விலையை உயர்த்துவது ஆட்சியாளர்களின் மக்கள் விரோத போக்கையே காட்டுகிறது.

ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட பிறகு முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மக்களை பாதிக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது ஆகும்.

ஒருவேளை ஜெயலலிதா ஆட்சியே பரவாயில்லை என்று மக்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டே அவரது ஆட்சியில் இருந்ததைவிட அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்த ஓ.பன்னீர்செல்வம் அரசு முடிவு செய்திருக்கிறதா? எனத் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், மக்களின் சுமையை உணர்ந்து பால் விற்பனை விலை உயர்வை தமிழக அரசு முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x