Last Updated : 30 Oct, 2014 08:45 AM

 

Published : 30 Oct 2014 08:45 AM
Last Updated : 30 Oct 2014 08:45 AM

ஆவின் பாலும் பொருட்பாலும்

பால் விலையேற்றத்தை விமர்சிப்பவர்கள், பால் உற்பத்தியாளர்கள் நிலையைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

தமிழக முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு, நினைவில் நிற்பது மாதிரியான எந்த நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லையே என எண்ணிக்கொண்டிருந்த வேளையில், அவரது தலைமையிலான தமிழக அரசு பால் விலையைச் ‘சட்டென’ அல்லது ‘பகீரென’ பத்து ரூபாய் அளவுக்கு அதிகரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

பத்து ரூபாய் அதிகரிப்பு என்பதைக் கேள்விப் பட்டவுடன் எனக்கு அம்மா குடிநீரும் பத்து ரூபாய்தானே என்பது ஞாபகம் வந்தது. இனி, பால் விலையேற்றத்தைச் சுலபமாகச் சமாளிக்க என்ன வழியென்றால், வாங்குகிற பாலைப் பாதியாகக் குறைத்துக்கொண்டு, அதன் சம அளவு அம்மா குடிநீரைக் கலந்துகொள்ள வேண்டியது

தான் போலும். இந்தச் சமன்பாட்டின் மூலம் சுமார் அரை லிட்டரிலிருந்து ஐந்து லிட்டர் வரை அதிகப் பொருளாதார இடறல் இல்லாமல் பழைய விலையிலேயே இந்த விலையேற்றத்தைச் சமாளிக்கலாம்.

நீரின்றி அமையாது

பால் எனும்போது தண்ணீர் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. காலை எழுந்தவுடன் தண்ணீருக்கு அடுத்தபடியாக நமது தொடர்பு பாலுடன்தான். செம்புலப் பெயல் நீரை விடவும் பாலும் தண்ணீரும் அசைக்க முடியாத கலப்பு. இதைச் சமீபத்திய, ‘ஆவின் பால் முறைகேடு’ வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து ஊர்ஜிதப்படுத்தியது. வீட்டுக்கு ஒரு படி பால் கொண்டுவந்து கொள்கலனில் ஊற்றச் சொன்ன மன்னன், காலையில் கலன் முழுக்கத் தண்ணீரைக் கண்டு திகைத்ததைக் கர்ண பரம்பரைக் கதையாகக் கேட்டிருக்கிறோம். அதைத் தவிரவும், அலுமினிய கேன்களில் வீடு தேடி பால் கொண்டுவந்து, பித்தளைக் குழாய் வழியாக ஊற்றிவிட்டு, அதே வீட்டில் சொம்புத் தண்ணீரை வாங்கி அதே கேனில் ஊற்றிக்கொண்டு புறப்படும் பால்காரர்களையும் சிலர் கண்டிருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். ஆகவே, பாலில் தண்ணீர் கலப்பதால் வருவதல்ல அதிர்ச்சி; பெட்ரோலில் தண்ணீர் கலந்தால்தான் நமக்கு அதிர்ச்சி.

ஆனால், கலப்பட விகிதமும் கொள்ளை யடிப்பதாகச் சொல்லப்படும் தொகையும் திகைப்பூட்டக் கூடியதேதான். திகைப்பு என்றால், அந்தத் தொகைக்கு எத்தனை இலக்கத்தை எழுதுவது என்கிற திகைப்புதான். தமிழ் மூளை, அஞ்சல் குறியீட்டு எண்ணின் ஆறு இலக்கம் தாண்டி, செல்பேசியின் பத்து இலக்கங் களையும் பதின்மூன்று, பதினாறு இலக்கங்களையும் நவீனத்தின் தயவால் இப்போதுதான் தரிசித்துவருகிறது. பால் கலப்படக்காரர்கள், பழைய கல்வெட்டுகளில் காணப்படுகிற ‘காராம் பசுவைக் கொன்ற பாவத்தை’ப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள் என எண்ணுகிறேன். டேங்கர் லாரிகளைத் தங்களுக்கான காமதேனுவாக மாற்ற எத்தனித்தவர்கள் அவர்கள்.

பேருந்துக் கட்டணமும் பால் விலையும்

பட்டாசுகள், பட்டாடைகள், பகட்டாபரணங்கள், பெட்ரோல் ஆகியவற்றின் விலையேற்றம் மாநில அரசின் முழுப் பாவமாகக் கொள்ளப்படாது. ஆனால், பேருந்துக் கட்டணம், பால் என அன்றாட வாழ்வின் மீது கைவைக்கும் காரியங்களின் மீதான அங்கலாய்ப்பு மாநில அரசைச் சேரும். ஏற்கெனவே பேருந்துக் கட்டணத்தை 40 முதல் 60 விழுக்காடு வரை உயர்த்தியது அதிமுக அரசு. இப்போதும் 40 சதவீதம்தான். அதிகரிக்கும் விலையை ஏழு, எட்டு என்று சொல்லாமல் பத்து என்று சொன்னது சற்று அதிகம்தான். என்ன இருந்தாலும் ஒரு இலக்கம் என்பது கருத்து ரீதியிலும் கற்பனையளவிலும் சுமை சுமையேதான்.

எதிர்க் கட்சிகள், மாற்றுக் கட்சிகள், மார்க்சிஸ்ட் கட்சியினர் என அனைத்துத் தலைவர்களும் ஒருசேர இந்த விலை உயர்வைக் கண்டித்தனர். அதிலும் சிலர், சமீபத்திய ஆவின் முறைகேட்டையும் விலை உயர்வையும் சம்பந்தப்படுத்திப் பேசியது குழப்பத்தை அதிகரித்தது. விலையேற்றம் என்பது முறைகேட்டை நினைவூட்டக்கூடிய செயலாக இருக்குமா அல்லது மறக்கடிக்கும் காரணியாக இருக்குமா?

சில உண்மைகள்…

ஊழலையும் முறைகேடுகளையும் நிவர்த்தித்தல் ஒருபுறம் செவ்வனே நடக்க வேண்டும் என்று விரும்புகிற நான், பால் விலையேற்றத்தைப் பூரணமாக மறுக்கும் கட்சியினருக்குச் சில தகவல்களைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். பால் விற்பனையின் பன்முகத்தன்மை அவ்வளவு சுலபமாக விளக்க இயலாதது எனினும், சில நடைமுறைத் தகவல்களை மட்டும் பார்ப்போம்.

1. 20 ஆண்டுகளாக எட்டணாவில் ஒட்டிக்கொண்டு தாக்குப்பிடித்த தீப்பெட்டியின் விலை, இரண்டு மடங்காக ஏறிய கடந்த ஆட்சிக் காலத்திலேயே அதிகம் விலையேறாமல் தாக்குப்பிடித்திருக்கிறது ஆவின் பால்.

2. அண்டை மாநிலங்களில் அரசு விற்கும் குறைந்த விலை பால் ஒரு லிட்டர்: கர்நாடகத்தில் (நந்தினி) - ரூ. 30, கேரளத்தில் (மில்மா) - ரூ. 38, ஆந்திரம் (விஜயா) - 40. (தமிழ்நாட்டில்தான் வெகுகாலமாக 24 ரூபாய் என்றபோது என் நண்பர், “நாம் பாதித் தண்ணீரைத்தானே வாங்கிக்கொண்டிருந்தோம். பால் கொதிக்குமே தவிர, பொங்கி வந்து அடுப்பில் சிந்தாது என்பது சாதகமான விஷயம்” என்றார். வீட்டின் கறவைப் பாலை லிட்டர் 23 ரூபாய்க்கு விற்றுவிட்டு, அரைலிட்டர் 21 ரூபாய்க்குத் தனியார் பால் பாக்கெட் வாங்குகிற சூழ்நிலையில் வாழ்பவர்.

3. தமிழ்நாட்டின் ஆவின் பால் புழங்கும் சில நகரங் கள் தவிர, எங்கும் 24 ரூபாய்க்குப் பால் வாங்க முடியாது.

4. இன்றளவும் தண்ணீர் கலக்காத பாலை 16 ரூபாய்க்கும் 18 ரூபாய்க்கும் வியாபாரிகளுக்கு ஊற்று கிற பல ஹெக்டேர் நிலப்பரப்பு தமிழ்நாட்டில் உண்டு.

5. 80 கிராம் நிகர எடையுடைய தயிரை பத்து ரூபாய்க்கு எவ்வளவோ ஊர்களில் விற்கிறார்கள்: வாங்குகிறார்கள். (ஒரு லிட்டர் தயிரின் விலை 120 ரூபாய்க்கு வரும்.)

6. உயர் தரம் என்கிற பெயரிலும் தரத்திலும் ஐம்பது அறுபது வரை செலவழிக்க மக்களில் பலர் தயாராய் இருக்கிறார்கள்.

7. சாதாரணத் தேநீர்க் கடைகளில் தேநீர் விலையோடு ஒப்பிட்டால் 24 ரூபாய் என்பது மூன்று அல்லது நான்கு தேநீரின் விலைதான். (கண்ணாடியால் சூழப்பட்ட கடை களை இதில் நான் சேர்க்கவில்லை. அவர்கள் பாலின் பகுதி விலையையோ அல்லது இரண்டு மடங்கையோ கேட்பார்கள்.)

8. நாட்டு மாடுகள் அருகிவரும் நிலையில், வாங்கக் கலயம் நிறைக்கும் கலப்பினப் பசுக்களின் நோய் எதிர்ப்புத் திறன் குறைவு. அந்தக் கன்றுகாலிகளுக்கு நோய் ஏற்பட்டால் அதைத் தீர்க்க உண்டாகும் செலவு, பால் பருகுவோரின் கற்பனையைவிட அதிகமானதே.

9. புண்ணாக்கு, தவிடு, தீவனத்தின் விலையையும் புல் அறுக்கும் ஆட்கூலியையும் (அல்லது கன்றுகாலிகளின் உரிமையாளர்களின் உழைப்பு மதிப்பையும்) அருகிலிருந்து பார்க்க நேரும் எவரும் பாலின் விலை லிட்டர் 30 ரூபாய்க்காவது பொருண்மையுடையதே என்பதை ஒப்புக்கொள்வார்கள்.

பாலுக்குப் பின்னுள்ள உழைப்பு

மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளைப் பேணுபவர்கள், ஒரு வகையில் பிணைக் கைதிகளைப் போன்றவர்களே. தங்கள் வெளி நடமாட்டத்தை 18 மைலுக்குள்ளாகவோ 8 மணி நேரத்துக்குள்ளாகவோ அமைத்துக்கொண்டு, சரியான சமயத்துக்குள் அவர்களின் கட்டுத்தறிக்கும் தொழுவத்துக்கும் திரும்ப வேண்டும். பாலுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பை நாம் அறிய மாட்டோம். பால் விலையேற்றத்தைக் கண்மூடித்தனமாக எதிர்ப்ப தென்பது வேளாண் சிறு மக்கள் அல்லது பால் உற்பத்தி யாளர்கள் என ஒரு பிரிவு இருப்பதையே மறுப்பது போன்றதாகும். கடந்த முறை வாங்கிய விலையில் பாக்கெட் சீப்பு ஒன்றைக் கூட நாம் வாங்க முடியாது. பாக்கெட் பால் மட்டும் பல ஆண்டுகளுக்கு ஒரே விலையில் நின்றுகொண்டிருக்குமா என்ன?

- க.சீ. சிவகுமார்,

‘கன்னிவாடி’ உள்ளிட்ட சிறுகதை நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: sivakannivadi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x