Last Updated : 10 Oct, 2014 09:04 AM

 

Published : 10 Oct 2014 09:04 AM
Last Updated : 10 Oct 2014 09:04 AM

யஜீதுகளை வேட்டையாடும் ஐ.எஸ்.

தனித்துவமான ஒரு சிறுபான்மை இனம் திட்டமிட்டு அழிக்கப்படுவது பேரவலம்!

இராக்கில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதச் சிறுபான்மையினரை ஐ.எஸ். தீவிரவாதிகள் மரணவாயிலில் நிற்கவைத்துள்ளனர் என்ற தகவலை அடுத்தே அமெரிக்கப் போர் விமானங்களை அனுப்பி, பயங்கரவாதிகள் இருக்கும் இடங்களில் குண்டுகளை வீசச் செய்தார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் யஜீது என்ற சிறுபான்மைக் குழுவைச் சேர்ந்தவர்கள். ஆதிகாலம்தொட்டே இவர்கள் இராக்கில் வாழ்ந்துவருகின்றனர்.

நோவாவின் பேழை ஒதுங்கிய இடம்

இராக்கின் வடமேற்குப் பகுதியில் உள்ள சிஞ்சார் மலைப் பகுதிக்குப் பெரும்பாலானவர்கள் தப்பி ஓடிவிட்ட னர். முன்னதாக ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஜிகாதிகள் அவர்களைக் கொல்வதற்காகச் சுற்றிவளைத்தனர். அந்த 40,000 பேரில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள் என்று ஐ.நா. தெரிவிக்கிறது. அவர்கள் இப்போது மலையின் 9 வெவ்வேறு இடங்களில் குடும்பங்களுடன் தங்கியுள்ளனர். நோவாவின் பேழை, ஊழிக்காலத்தின் இறுதியில் ஒதுங்கிய மலை இதுதான் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். பைபிளில் வரும் இந்தக் கதை அனைவரும் அறிந்ததே.

யஜீதுகளை ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகவும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த புகைப் படங்கள் சமீபத்தில் வெளியாகி, பார்ப்பவர்களின் நெஞ்சங்களையெல்லாம் பதறவைத்தன. சுமார் 500 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் 40 பேர் சிறுவர், சிறுமியர். சுமார் 1,30,000 யஜீதுகள் இராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள தோஹுக் நகருக்கும் இர்பில் என்ற நகருக்கும் ஓடிவிட்டனர். இவை இராக்கின் வடக்குப் பகுதியில் உள்ளன.

இராக்கின் எல்லாப் பகுதிகளிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தவரையும் குறிவைத்துக் கொல்கின்றனர். கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்த நகரம் இப்போது வெறிச்சோடியிருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு அஞ்சி அவர்கள் ஏற்கெனவே அந்த ஊரைக் காலிசெய்துவிட்டு ஓடிவிட்டனர்.

யஜீதுகள் தாக்கப்படுவதை ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சில் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இதற்குக் காரணமானவர்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங் களுக்காக நீதியின்முன் நிறுத்தப்பட்டு, கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறது.

யஜீதுகள் யார்?

உலகில் மொத்தம் 7 லட்சம் யஜீதுகள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு இராக்கில் சிஞ்சார் மலைப் பிரதேசத்திலும் அதைச் சுற்றியுள்ள நகரங்களிலும் வசிக்கின்றனர் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. வரலாற்றுரீதியாகவே இவர்களை மற்றவர்கள் தவறாகத்தான் புரிந்துகொண்டுள்ளனர். யஜீதுகள் இனரீதியாகப் பார்க்கும்போது குர்துகள். மற்றவர்களால் கடுமையாக ஒடுக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டும்கூட இந்த மக்கள் தங்களுடைய மதநம்பிக்கையை விட மறுக்கின்றனர். அத்துடன் வேற்று மதங்களுக்கு மாறவும் மறுக்கின்றனர். எல்லாவற்றையும்விட முக்கியம் இவர்கள் தங்களுடைய மதத்துக்கு மற்றவர்கள் மதம் மாறுவதையும் விரும்புவதுமில்லை, ஆதரிப்பதுமில்லை. அதைவிட முக்கியம், இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் பிறருடன் திருமண உறவையும் வைத்துக்கொள்வதில்லை. எனவே, இவர்கள் அழிக்கப்பட்டால் இந்த இனம் கிளைப்பதற்கோ வளர்வதற்கோ வாய்ப்பே இல்லை.

11-ம் நூற்றாண்டில் உமையத் ஷேக் என்பவர்தான் இதை உருவாக்கினார். இந்த மதமானது யூத மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதம், நெருப்பைத் தெய்வமாக வழிபடும் ஜொராஸ்டிரிய மதம் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு அம்சத்தையும் எடுத்துக்கொண்டது. கிறிஸ்தவர்களுக்கு இருப்பதைப் போல இவர்களுக்கு ஞானஸ்நானம் உண்டு. இஸ்லாமியர்களைப் போல விருத்த சேதனம் உண்டு. ஜொராஸ்டிரியர்களைப் போல தீ வழிபாடு உண்டு. ஆனால், இவர்கள் ஆபிரகாமை ஏற்றுக்கொள்ளாதவர்கள்.

சாத்தானை வழிபடுபவர்களா?

இவர்கள் மாலிக் டவ்வூஸ் என்ற மயில் தேவதையை வழிபடுவதுதான் மற்ற மதத்தினரால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. மயில் தேவதையைக் குத்துவிளக்கில் பொறித்து வைத்துக்கொள்வது இவர்கள் வழக்கம். (எனவே, சிலர் இவர்களை இந்துக்கள் என்றும் அழைக்கின்றனர்.) உருவ வழிபாடு தடை செய்யப்பட்டிருக்கும்போது, மயில் தேவதை உருவம் எதற்கு என்பதுதான் பெரும்பாலானவர்களின் கேள்வி.

மொத்தம் ஏழு தேவதைகள் என்றும், அதில் தலையாய தேவதை இந்த மாலிக் டவ்வூஸ் என்றும் பிற தேவதைகள் அனைத்தும் அதற்கும் கீழே என்பதுதான் யஜீதுகளின் நம்பிக்கை. சாத்தானைக் கடவுள் சபித்து, சொர்க்கத்திலிருந்து பூமிக்கு விரட்டியதாகப் புராணக் கதைகள் உண்டு. ஆனால், யஜீதுகளோ, கடவுளால் மன்னிக்கப்பட்டதுதான் தங்களுடைய மாலிக் டவ்வுஸ் என்று நம்புகின்றனர். இதனாலேயே, சாத்தானை வணங்குகிறவர்கள் என்று மற்றவர்கள் இவர்கள்மீது முத்திரை குத்திவிட்டனர்.

18, 19-ம் நூற்றாண்டுகளில் ஆட்டோமான் சாம்ராஜ்யத்தின்போதும் யஜீதுகளுக்கு எதிராக 72 முறை படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. 2007-ல்கூட யஜீதுகள் வசித்த வடக்கு இராக்கில், அவர்கள் அதிகம் புழங்கும் பகுதிகளில், கார்களில் குண்டு வைத்துக் கொன்றனர். அமெரிக்கா இராக்கில் நுழைந்த பிறகு, நடந்த இந்தக் கடும் தாக்குதலில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட யஜீதுகள் இறந்துள்ளனர்.

ஐ.எஸ்ஸுக்கு முன்னால் இராக்கில் ஆதிக்கம் செலுத்திய அல்-காய்தா இயக்கத்தவர்கள்கூட யஜீதுகளைக் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்று சாடினார்கள். இதனால், அவர்கள் வரம்பில்லாமல் கொல்லப்பட்டனர். எங்களைக் கொல்லாதீர்கள், காப்பாற்றுங்கள் என்று யஜீது இனத்தைச் சேர்ந்த வியான் டாகில் என்ற பெண் உறுப்பினர் இராக்கிய நாடாளுமன்றத்தில் கதறி அழுதார். இராக்கிய அரசும் சர்வதேசச் சமூகமும் தங்களைக் காக்க வேண்டும் என்று யஜீதுகள் வேண்டுகோள் விடுத்தபடி இருக்கின்றனர்.

ஆன்மிக குரு பாபா ஷேக்

யஜீதுகளின் ஆன்மிக குரு பாபா ஷேக் என்பவரை கால் சாலி என்ற ஆராய்ச்சியாளர் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்காகப் பேட்டி கண்டார். “யாஜிடிக்களில் சுமார் 70,000 பேர் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். மதரீதியாகவும் இனரீதியாகவும் எங்களைக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகிறோம். லாலேஷ் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவை இதனாலேயே நடத்த முடியவில்லை” என்று வேதனையோடு கூறியிருக்கிறார் பாபா.

- © தி கார்டியன், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x