Published : 21 Sep 2014 02:36 PM
Last Updated : 21 Sep 2014 02:36 PM

ஆவின் பால் கலப்பட ஊழல்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

ஆவின் பால் கலப்பட ஊழல் விவகாரத்தில் உண்மைகளை வெளிக்கொணர, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "ஆவின் பால் கலப்பட ஊழல் தொடர்பாக வெளியாகிவரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பவையாக உள்ளன. கலப்பட ஊழலின் அளவு எதிர்பார்க்கப்பட்டதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பதை ஊடகங்களில் வரும் செய்திகளிலிருந்து யூகிக்க முடிகிறது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆவின் பால் ஏற்றி வந்த சரக்குந்தை நிறுத்தி அதிலிருந்த 12 ஆயிரம் லிட்டர் பாலில் 1800 லிட்டர் பாலை திருடிவிட்டு, அதற்கு பதிலாக பாலை அடர்த்தியாக்கக் கூடிய வேதிப்பொருள் கலந்த தண்ணீரை ஒரு கும்பல் கலந்ததை கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி காவல்துறையினர் கண்டு பிடித்தனர்.

இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த மோசடிக்கு துணையாக இருந்ததாக ஆவின் நிறுவன ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆரம்பத்தில் இந்த கலப்படம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான போது, அது ஏதோ ஒரே ஒரு இடத்தில் மட்டும் முதல்முறையாக நிகழ்ந்த தவறாகவே பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த கலப்பட ஊழலில் முக்கியப் பங்கு வகித்தவர்களில் ஒருவரான வைத்தியநாதன் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட பிறகு வெளியாகும் தகவல்கள் தான் இந்த ஊழல் எந்த அளவுக்கு புரையோடிப் போயிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.

கைது செய்யப்பட்டுள்ள வைத்தியநாதன் மொத்தம் 104 பால் சரக்குந்துகளை இயக்கி வருவதாகவும், ஆவின் நிறுவனத்துக்கு பாலை கொண்டு செல்லும் பணியில் அவை ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 17 மண்டலங்களிலும் கலப்பட ஊழல் நடந்திருப்பதாகவும், ஒவ்வொரு சரக்குந்திலும் தினமும் சுமார் 2000 லிட்டர் வீதம் ஒவ்வொரு நாளும் 2 லட்சம் லிட்டர் பால் திருடப்பட்டு அதற்கு பதிலாக வேதிப்பொருள் சேர்க்கப்பட்ட தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

பால் கலப்பட ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தமிழக காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.பி.சி.ஐ.டி) சிறப்பாக செயல்பட்டு பல உண்மைகளை கண்டறிந்துள்ளனர். இந்த ஊழலில் ஆவின் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலருக்கும், ஆளுங்கட்சியின் பெரும்புள்ளிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. விசாரணை இதே திசையில் சென்றால் பெரும் நெருக்கடி ஏற்படும் என்பதால் விசாரணையை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. அதனால் தான் தினமும் 2 லட்சம் லிட்டர் வீதம் ஆண்டுக்கு ரூ.150 கோடி அளவுக்கு கலப்பட ஊழல் நடந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், பால் கலப்பட ஊழலில் மதிப்பு ரூ.10 கோடிக்கும் குறைவாகவே இருக்கும் என தமிழக அரசின் சார்பில் திட்டமிட்டே செய்திகள் கசிய விடப்படுகின்றன.

பால் கலப்பட ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வைத்தியநாதன் அ.தி.மு.க.வில் மாவட்ட நிர்வாகியாக இருந்தவர். பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தி உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நெருக்கமானவர். பால் கலப்பட மோசடி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மூர்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், அவர் எதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறித்து அரசின் சார்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை. பால் கலப்பட ஊழல் தொடர்பாக இதுவரை அவரிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர இயலாத சூழலில் ஆவின் பால் தரலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவுக்கு அதன் தரம் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பாலில் கலப்படம் செய்த கொடியவர்களை மன்னிக்கவே கூடாது. ஆனால், கலப்பட ஊழலில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருப்பதால், விசாரணையை முடக்கவும், இதுவரை கைது செய்யப்பட்ட சிலரை பலிகடா ஆக்கிவிட்டு இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட பெரும்புள்ளிகளை தப்ப வைக்கவும் முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறையால் விசாரணை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் முழுமையான உண்மைகள் வெளிவர வாய்ப்பில்லை.

எனவே, ஆவின் பால் கலப்பட ஊழல் குறித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு ( Special Investigation Team) அமைத்து விசாரணை நடத்தி, இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றம் அண்மையில் பரிந்துரைத்தவாறு பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தம் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x