Published : 18 Jan 2014 00:00 am

Updated : 18 Jan 2014 10:40 am

 

Published : 18 Jan 2014 12:00 AM
Last Updated : 18 Jan 2014 10:40 AM

அருகிவரும் இனமா, பிழைதிருத்துநர்கள்?

ஒரு தச்சரைப் பார்ப்பதே இப்போதெல்லாம் அபூர்வமாகிவிட்டது, எலக்ட்ரீசியனைப் பிடிப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது, பிளம்பர் எல்லாம் எங்கே போனார்கள் என்பன போன்ற புலம்பல்கள் இப்போது சகஜம். ஆனால் தச்சர்களும் கைவினைஞர்களும் ஏன் போனார்கள் என்று யோசித்திருக்கிறோமா? அதுபோலத்தான் ப்ரூஃப் ரீடர்கள் என்னும் பிழைதிருத்துபவர் இனமும் அருகிக்கொண்டுவருகிறது.

அதனால், நாளிதழ்கள் தப்பும்தவறுமாக வருகின்றன. புத்தகங்களில் பிழைகள் மலிந்துவிட்டன. சுவரொட்டிகள் முதல் ஃப்ளக்ஸ் போர்டுகள் வரை வல்லின, மெல்லின, இடையினக் குழப்பங்களைப் பார்க்கிறோம். சிறு பிழைகளையும் பொறுக்காதவர் என்று சொல்லப்படும் கருணாநிதி தலைமை வகிக்கும் தி.மு.க-வின் சுவரொட்டிகளில்கூட சமீப காலமாகத் தமிழ் பாடாய்ப்படுகிறது. தொலைக்காட்சி ஊடகங்களிலோ சொல்லவே வேண்டியதில்லை… ஸ்க்ரோல் செய்திகளில் தமிழ் கிட்டத்தட்ட படுகொலை செய்யப்படுகிறது.


கணினியின் காலத்தில்…

ஆங்கிலத்திலும் சொல்திருத்திகள் (ஸ்பெல் செக்கர்) போன்ற மென்பொருள்கள் வந்த பிறகு பிழைதிருத்துபவர் இனம் அருகிவிட்டது போன்ற தோற்றமே இருக்கிறது. ஆனால் எழுத்தாளர் மற்றும் செய்தியாளர்களின் இலக்கணப் பிழைகள், ஒருமை-பன்மை தவறுகள் போன்றவற்றை சரிசெய்யவும், மொழியைத் துறை சார்ந்து, கலைச்சொற்கள் சார்ந்து தரப்படுத்துவதற்கும் எடிட்டிங் பணிகளுக்கும் கணிப்பொறி அறிவுடன் மொழிப்பணியாளர்களின் நிலை அத்தியாவசியமாகவே இன்னமும் உள்ளது.

தமிழிலும் பிழைதிருத்துவதற்கு மென்பொருட்கள் வந்துவிட்டன. ஆனால் அவற்றின் செயல்பாடு, தமிழ் மொழிப் பயன்பாட்டின் பரந்துபட்ட தேவைகளை இன்னும் முழுமையாக நிறைவேற்ற இயலவில்லை. இந்தச் சூழ்நிலையில், பிழைதிருத்துபவர்கள், பிரதியைச் செம்மைப்படுத்துபவர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு தொழிற்பிரிவினரின் தேவை அதிகமாகவே இருக்கிறது. பதிப்புத் தொழில்நுட்பம் நவீனமாக மாறிவருகிறது. தமிழ் பதிப்புத் தொழிலில் கிட்டத்தட்ட ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் (கல்விப் புத்தகங்களைத் தவிர) விற்பனை அளவு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், நவீனக் கணிப்பொறித் தொழில்நுட்பம் மற்றும் தமிழ் மொழியறிவு கொண்ட புதிய தலைமுறை பிழைதிருத்துநர்கள் மற்றும் பிரதியை மேம்படுத்தும் எடிட்டர்கள் இங்கே உருவாகவேயில்லை. காரணம் என்ன?

பாவப்பட்ட வேலையா?

“பிழைதிருத்துவதை நான் பாவப்பட்ட வேலையாகவே நினைக்கிறேன். பிழை திருத்துபவர்கள் மீது மேலிருப்பவர்களுக்கு மரியாதை இல்லாததே இதற்குக் காரணம். பிழைதிருத்துபவர்கள் யாருமே 100% சரியாகப் பிழைதிருத்துவேன் என்று சொல்லிவிட முடியாது. ஒரு பிரதியை நன்றாகத் திருத்த வேண்டுமானால் அதற்குக் கால அவகாசம் தேவை. அதற்குரிய பணமும் தேவை. அவசரமாகப் பிழைதிருத்தினால் பிழை வருவதைத் தவிர்க்கவே முடியாது. ஒரு பக்கத்துக்குப் பத்து ரூபாயாவது தர வேண்டும். ஆனால் தமிழில் ஐந்து முதல் ஆறு ரூபாய்தான் தருகிறார்கள். மூன்று ரூபாய் தருபவர்களும் இருக்கிறார்கள்” என்கிறார் சிவசுப்ரமணியன்.

பகுதிநேரப் பிழைதிருத்துநர்கள்

“நல்ல நிறுவனப் பின்புலம் உள்ள இடங்களிலேயே நல்ல பிழைதிருத்துநர்களை உருவாக்க முடியும். சிறுபத்திரிகை சார்ந்த பதிப்பகங்களைவிட மையநீரோட்ட நூல்களை வெளியிடும் வானதி, கண்ணதாசன் போன்ற நிறுவனங்கள் வெளியிடும் நூல்களில் அதனால்தான் பிழைகள் குறைவாக இருக்கின்றன. அங்கே பிழைதிருத்துபவர்கள் முழு நேரப் பணியாளர்களாக இருக்கிறார்கள். மாறிவரும் மொழித் தேவைகளை உணர்ந்து கணிப்பொறித் தொழில்நுட்பத்தையும் அவர்கள் தெரிந்துகொண்டு வளர்வதற்கு அவர்களுக்கு மாதச் சம்பளம் போன்ற பாதுகாப்பு அவசியம். ஆனால், தமிழ்ப் பதிப்புலகைப் பொறுத்தவரை பகுதிநேரமாகப் பிழைதிருத்துபவர்கள்தான் அதிகம். அவர்களுக்குக் கொடுக்கப்படும் பணம் மிகவும் குறைவு” என்கிறார் அடையாளம் பதிப்பகத்தைச் சேர்ந்த சாதிக்.

மூன்று பிழைகள்தானே…

“தமிழ்ப் பதிப்புத் துறையைப் பொறுத்தவரை பிழைதிருத்துவதை முழு நேரப் பணியாகச் செய்வதற்கு வாய்ப்பே இல்லை” என்கிறார் ஸ்ரீ ஜெயந்தி பாஸ்கர். “எனது பொருளாதாரத் தேவையைவிட ஆர்வம் காரணமாகவே பிழைதிருத்தும் பணிகளில் ஈடுபடுகிறேன். மூன்று முதல் ஐந்து ரூபாய் மட்டுமே ஒரு பக்கத்துக்குக் கிடைக்கிறது. வருவாய் என்று நினைத்துச் செய்தால் அதை என்னால் செய்யவே முடியாது. ஒரு முழு நூலிலும் பெரிய அளவில் தவறுகளே இல்லாமல் இருக்கும். ஆனால், மூன்று நான்கு தவறுகள் அந்தப் புத்தகத்தைப் பாழாக்கிவிடும். அந்த மூன்று தவறுகளை நாங்கள் கண்டுபிடிப்பதற்கு முழு புத்தகத்தையும் படித்துத்தான் ஆக வேண்டும். மூன்று பிழைகளைத்தானே திருத்தியிருக்கிறார் என்ற மனப்போக்கு இருக்கக் கூடாது” என்கிறார் அவர்.

ஆண்டுக்கு ஒருமுறை கண்ணாடி…

“நான் பிழைதிருத்தும் பணியை மட்டுமே செய்வதில்லை. நூலைச் செம்மைப்படுத்துவது, அதாவது எடிட்டிங்கிலும் ஈடுபடுகிறேன். நிறைய நூல்கள் தரமாக வெளிவருவதற்குத் துணையாக இருந்திருக்கிறேன். ஆனால் வேலை கொடுப்பவர்கள் அதற்கான மதிப்பைத் தெரிந்துவைத்துள்ளார்களா என்று தெரியவில்லை. 16 பக்கத்துக்கு 40 ரூபாய்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னைப் போன்றவர்கள் சண்டை போட்டு 80 ரூபாயாக கேட்கிறோம். அப்படியும் ஒரு பக்கத்துக்கு 5 ரூபாய்தான் வருகிறது. அத்துடன், போதிய அளவு அவகாசமும் கொடுக்க மாட்டார்கள். வேலை செய்த பிறகு உடனடியாகப் பணமும் கொடுக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் பிழைதிருத்துநர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தவிர்க்க எழுத்தாளர்களையே பிழைதிருத்தச் சொல்கிறார்கள். புத்தகங்களும் தப்பும் தவறுமாக வருகின்றன. பிழைதிருத்துவதையே ரொம்ப காலம் செய்ததால் எனக்குக் கண் பழுதாகிவிட்டது. ஆண்டுக்கு ஒரு முறை கண்ணாடி மாற்றுகிறேன்” என்கிறார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜீவசுந்தரி.

பபாசியின் கடமை

காந்தளகம் பதிப்பகத்தைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் போன்றவர்கள் புதிய பிழைதிருத்துநர்களுக்குப் பயிற்சியளிக்க பபாசி போன்ற அமைப்புகள் முயற்சிக்க வேண்டும் என்று வெகு நாட்களாகச் சொல்லிவருகிறார்கள். புத்தகத் திருவிழாக்களை ஊர்தோறும் நடத்துவது மட்டும் இதுபோன்ற அமைப்புகளின் வேலை அல்ல. பதிப்பகத் தொழில் காலம்தோறும் ஏற்படும் மாறுதல்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள செயல்படுவதும் அவசியம்.

ஒரு புத்தகத்தில் நிறைய தவறுகளைக் காணும்போது, “என்ன ப்ரூஃப் பார்க்கிறார்கள்?” என்று நாம் கோபப்படுவோம். ஆனால், ஒரு புத்தகம் நேர்த்தியாக வந்துவிட்டால், அதன் பிரதியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பிழைதிருத்திய அந்த முகம் இல்லாத மனிதருக்கு நம்மில் பெரும்பாலானவர்கள் நன்றி சொல்வதே இல்லை. அப்படி முகம் தெரியாத பிழைதிருத்துநர்கள்தான் அச்சுக்கோத்து நூல்கள் அச்சிடப்பட்ட காலத்திலிருந்து இன்று கணிப்பொறி காலம் வரை கண்களின் ஆரோக்கியத்தையே மூலதனமாக்கி, புத்தகங்களை சிக்கலின்றி நாம் படிப்பதற்கு வகைசெய்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், தச்சர்களை, பிளம்பர்களை, கைவினைக் கலைஞர்களை நாம் மறந்ததுபோலப் பிழைதிருத்துநர்களையும் மறந்துவிட்டோம். “இப்போதெல்லாம் ப்ரூஃப் திருத்த நல்ல ஆள் யாருங்க இருக்காங்க?” என்று புலம்ப மட்டும் செய்கிறோம்!

தொடர்புக்கு:

ஷங்கர் - sankararamasubramanian.p@kslmedia.in

பிழைதிருத்துநர்கள்தமிழ் மொழிபுத்தகங்கள்ப்ரூஃப்ஸ்ரீ ஜெயந்தி பாஸ்கர்பபாசி

You May Like

More From This Category

bharathi

மக்கள் கவி பாரதி

கருத்துப் பேழை

More From this Author