Published : 16 Aug 2014 11:41 AM
Last Updated : 16 Aug 2014 11:41 AM

ராணுவ பலத்தை பறைசாற்றும் ஐ.என்.எஸ். கொல்கத்தா: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஐ.என்.எஸ். கொல்கத்தா’ போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்த போர்க்கப்பல் இந்தியாவின் ராணுவ வல்லமையை உலகிற்கு பறைசாற்றுகிறது என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க் கப்பலை கடற்படையில் சேர்ப்பதற்கான விழா மும்பை கடற்படைத் தளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண், கடற்படைத் தளபதி ஆர்.கே.தோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

நமது ராணுவ வலிமை உலகிற்கு தெரியும்போது நம் மீது எதிரி நாடுகளுக்கு அச்சம் ஏற்படும். நமக்கு எதிராக ஒரு அடிகூட எடுத்து வைக்க மாட்டார்கள். உலக வர்த்தகத்தில் கடல்சார் பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் அடிப்படையில் பரந்து விரிந்த இந்திய கடல் எல்லையைப் பாதுகாக்கவும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் கடற்படை மேலும் வலுவாக்கப்படும்.

ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க் கப்பல் முழுமையாக உள்நாட்டில் தயாரிக் கப்பட்டுள்ளது. இது நமது தொழில்நுட்ப தன்னிறைவுக்கு எடுத்துக்காட்டாகும். இந்த போர்க்கப்பல் கடற்படையில் இணைவ தன் மூலம் நமது ராணுவ வலிமை உலகிற்கு பறைசாற்றப்படுகிறது. தற்போது வெளிநாடுகளில் இருந்தே ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறோம். பாதுகாப்புத் துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பதன் மூலம் விரைவில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படும்.

இவ்வாறு மோடி பேசினார்.

அதிநவீன ஏவுகணைகள்

மும்பை கப்பல் கட்டுமானத் தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பல் 163 மீட்டர் நீளம், 17.4 மீட்டர் அகலம், 6800 டன் எடை கொண்டதாகும்.

தரையில் இருந்து தரை இலக்கை தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை, எதிரி விமானங்கள், போர்க் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணைகள், மிகத் துல்லியமாகக் கண்காணிக்கும் ரேடார்கள் ஆகியவை ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. இதில் இரண்டு ஹெலிகாப்டர் தளங்களும் உள்ளன.

ஐ.என்.எஸ். டெல்லி, ஐ.என்.எஸ். சென்னை, ஐ.என்.எஸ். கொச்சி போர்க் கப்பல்கள் வரிசையில் இந்த போர்க் கப்பலுக்கு ஐ.என்.எஸ். கொல்கத்தா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கொல்கத்தா நகரின் சிறப்பை விளக்கும் வகையில் கப்பலின் முகப்பில் வங்கப் புலியும் பின்பக்கத்தில் ஹவுரா பாலம் படங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் மிகப் பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, கடற்படையில் சேர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது ஐ.என்.எஸ். கொல்கத்தா கடற்படையில் இணைந்துள்ளது. இதன்மூலம் இந்திய கடற்படையில் உள்ள போர்க்கப்பல்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x