Last Updated : 11 Aug, 2014 06:05 PM

 

Published : 11 Aug 2014 06:05 PM
Last Updated : 11 Aug 2014 06:05 PM

போகிற போக்கில்: கைவினைக் கலையே என் சுவாசம்

அலங்காரக் கைவினைப் பொருட்கள் செய்வது, பல டிசைன்களில் மெஹந்தி போடுவது, சுவையான கேக் செய்வது, பேப்பர் ஜுவல்லரிகளை வடிவமைப்பது, விதவிதமான ஃபேஷன் நகைகளைச் செய்வது, கண்ணாடிகளில் வண்ண ஓவியங்கள் தீட்டுவது, தஞ்சாவூர் ஓவியங்கள் வரைவது என எப்போதும் கலைகளுடனேயே காட்சி தருகிறார் கோவையைச் சேர்ந்த செல்வப்பிரியா.

ஒரு பள்ளியில் நிர்வாகப் பணியில் இருக்கும் செல்வப்பிரியா, இரண்டு குழந்தைகளின் அம்மா. வேலைக்குச் சென்று வீடு திரும்பி, குடும்பப் பொறுப்புகளை கவனித்துவிட்டு, நுண்கலையில் ஈடுபட எப்படி நேரம் இருக்கிறது என்று கேட்டால், தன் கலையார்வமே காரணம் என்கிறார்.

“கைவினைக் கலை என் சுவாசம். அதைச் சிலாகித்துச் செய்வதால் எனக்கு அது சுமையாகத் தெரிவதில்லை. என் அன்றாடப் பணிச் சுமைகளுக்கு இடையே இந்த வேலைகள் ஒரு இளைப்பாறலைத் தருகிறது” என்று கலைகள் மீதான தன் பிணைப்பைப் பகிர்ந்துகொள்கிறார் செல்வப்பிரியா. இரவு 9 மணிக்கு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தினமும் 2 மணி நேரம் கைவினைக் கலையில் ஈடுபடுகிறார்.

எட்டாவது படிக்கும்போது தனக்குள் இருந்த கலை உணர்வை அடையாளம் கண்டுகொண்டதாகச் சொல்லும் செல்வப்பிரியா, கலை தன் கைகளில் தவழக் காரணம் தன் தந்தை ராஜ்குமார் என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

எட்டாவது படிக்கும்போது தனக்குள் இருந்த கலை உணர்வை அடையாளம் கண்டுகொண்டதாகச் சொல்லும் செல்வப்பிரியா, கலை தன் கைகளில் தவழக் காரணம் தன் தந்தை ராஜ்குமார் என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

கைவினைக் கலைகளில் தேர்ச்சி பெற்ற பிறகு பள்ளி, கல்லூரிகளில் நடந்த கைவினைப் பொருட்கள் செய்யும் போட்டிகளில் தவறாமல் பரிசைத் தட்டி வந்திருக்கிறார் இவர்.

“திருமணத்திற்குப் பிறகு கலை ஆர்வம் எனக்கு சிறிதும் குறையவில்லை. அந்தப் படைப்பாற்றலுக்கு என் புகுந்த வீட்டினர் முட்டுக்கட்டை போடாததுடன் ஆதரவுக் கரம் நீட்டியது எனக்குப் பெரும் பலமாக இருந்தது” என்கிறார்.

பல விதமான கலைப் பொருட்களைச் செய்தாலும் விதவிதமான வளையல்களே செல்வப்பிரியாவின் அடையாளமாகத் திகழ்கின்றன.

வீட்டில் இருந்தபடியே வருமானம்

“திரெட் பேங்கிள்ஸ், பேப்பர் ஸ்டட், டெரகோட்டா ஜுவல்லரி இவற்றை முறையாகக் கற்றுக்கொண்டு பெண்கள் வீட்டில் இருந்தபடியே மாதம் 6000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். தினமும் 4 மணி நேரம் வேலை செய்தாலே போதும். இதற்கு மூலதனம் கலை ஆர்வமும், கிரியேட்டிவிட்டியும்தான்” எனக் குறிப்புகளும் தருகிறார் செல்வப்பிரியா.

இன்று பலரும் ஆர்வத்துடன் கலைப் பொருட்கள் செய்வதில் ஈடுபடுவதால் தனக்கென எப்போதும் தனிப் பாணியை உருவாக்கிக்கொள்வது வெற்றிக்கு வழிவகுக்கும் என்கிறார் இவர்.

பொழுதுபோக்கிற்காகக் கற்றுக்கொண்ட கலை சிலருக்கு பொழுதுபோக்காகவே தொடரலாம். ஆனால் சிலருக்கு அதுவே வாழ்வாதாரமாகவும் மாறலாம். எல்லாமே நம் அணுகுமுறையில்தான் இருக்கிறது. செல்வப்பிரியாவும் கலைகளை அப்படியொரு கோணத்தில் இருந்துதான் அணுகியிருக்கிறார் என்பதற்கு அவருடைய வெற்றியே சாட்சி.

படங்கள்: ஜெ. மனோகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x