Published : 08 Jul 2021 03:10 PM
Last Updated : 08 Jul 2021 03:10 PM

யூடியூப் மூலம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் பழங்குடி இளைஞர்

ஊரடங்கு எல்லோரது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஐசக் முண்டாவும் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டார். வேலையிழப்பால் வீட்டில் முடங்கிய அவரை பசி துரத்தியது.

பசியை மறக்க அவர் தேர்வு செய்தது யூடியூப் வீடியோ. நிறைய வீடியோக்களை அதுவும் உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்களைப் பார்த்த ஐசக் முண்டாவுக்கு தானும் வீடியோக்களை வெளியிட வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது.

தனது வறுமையைப் போக்கக் கடன் வாங்காமல், தொழில் மூலதனத்துக்காக முண்டா ரூ.3000 கடன் வாங்கினார். அதில் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கியுள்ளார். வீட்டில் கிடைத்த எளிமையான உணவை ரசித்து ருசித்து சாப்பிடுவதை ஒரு வீடியோவாக எடுத்தார். அந்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்தார். 'Isak Munda Eating' ஐசக் முண்டா ஈட்டிங் என்று அதற்குப் பெயர் சூட்டினார்.

அவரது அந்த வீடியோவுக்கு ஆதரவு குவிந்தது. அந்த ஒரு வீடியோவிற்கு மட்டுமே ஏகப்பட்ட பார்வையாளர்கள் கிடைக்க உடனே ஐசக் அடுத்தடுத்து வீடியோக்களைப் பதிவிட்டார்.

அன்றாடம் கிடைக்கும் எளிமையான கிராமத்து உணவுகளை மட்டுமே அவர் சாப்பிட்டு வீடியோவாக பதிவிடுகிறார். இன்று அவரது யூடியூப் சேனலுக்கு 7 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். யூடியூப் வீடியோக்கள் மூலம் நிரந்தரமாக வருமானம் ஈட்டுகிறார்.

இது குறித்து முண்டா கூறும்போது, "நான் இப்போது தினக்கூலி இல்லை. என்னால் சொந்தமாக சம்பாதிக்க முடிகிறது. எனது வீடியோக்கள் மூலம் உள்ளூர் கலாச்சாரங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்" என்றார்.

சம்பல்பூர் மாவட்டத்தில் ஐசக் முண்டா இப்போது ஒரு பிரபலமாகிவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x