

வத்தலகுண்டு அருகே சோதனைச் சாவடியில் போலீஸாரைத் தாக்கிய இளைஞர்கள் மூன்று பேரை விருவீடு போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே போலீஸார், இளைஞர்கள் இடையே நடந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே திண்டுக்கல்- மதுரை மாவட்ட எல்லையில் உள்ள விருவீடு கிராமத்தில் சோதனைச் சாவடி உள்ளது. இன்று காலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள நல்லதேவன் பட்டியைச் சேர்ந்த முத்து மாணிக்கம் (24), ரஞ்சித் (23), காளிதாஸ் (33) உள்ளிட்ட ஆறு பேர் இரண்டு இருசக்கர வாகனங்களில் வத்தலகுண்டு நோக்கிச் சென்றுள்ளனர்.
சோதனைச் சாவடியைக் கடந்தபோது இருசக்கர வாகனம், போலீஸார் அமைத்திருந்த தடுப்புகள் மீது மோதியது. அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்தி போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இளைஞர்கள் கட்டை, தென்னை மட்டையால் போலீஸாரைத் தாக்கினர். இதையடுத்து இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர்களைக் கைது செய்தனர்.
இளைஞர்கள் குடிபோதையில் இருந்ததாகவும், சோதனைச் சாவடியில் நிற்காமல் வேகமாகச் சென்றதால் தடுப்புகள் மீது மோதியதாகவும், இதைத் தட்டிக்கேட்ட போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்க வந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். போலீஸாரை, இளைஞர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.