

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகளுடன் அமர்ந்து ஒய்யாரமாகப் பயணம் செய்த குரங்கின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து குரங்குகள் தொல்லைக்கு முடிவு கட்ட முயன்று வருகிறது டிஎம்ஆர்சி.
ச்மூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில், குரங்கு அமைதியாக சில நொடிகள் அமர்ந்து வருகிறது. அப்போது பயணி ஒருவர் "குரங்குக்கெல்லாம் மாஸ்க் கட்டாயம் இல்லையா?" எனக் கிண்டலாகக் கேள்வி எழுப்ப மற்றவர்கள் சிரிக்கின்றனர்.
மேலோட்டமாக நகைப்புக்குரியதாகவே இந்த வீடியோ இருந்தாலும், உண்மையில் பயணிகள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் சம்பவம் இது.
டெல்லியில் பொதுவாகவே குரங்குகளின் தொல்லை சற்று அதிகம். டெல்லியில், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் எனப் பல இடங்களிலும் குரங்குகளை விரட்ட ஆட்களை நியமிக்கும் வழக்கம் கூட உண்டு.
இந்நிலையில் தான் டெல்லி மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று சாகவாசமாக பயணிகளுடன் சக பயணிபோல் சென்ற காட்சி இணையத்தில் வைரலானது.
கடந்த சனிக்கிழமையன்று நொய்டா வைஷாலி பகுதிகளுக்கு இடையேயான மெட்ரோ ரயிலில் குரங்கு பயணம் செய்தது.
இந்த வீடியோவைப் பகிர்ந்த நெட்டிசன்கள் டெல்லி மெட்ரோ நிர்வாகத்தை டேக் செய்து பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுனர். பயணிகளின் பாதுகாப்புக்கு இது அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறினர்.
இது குறித்து டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிகையில், "டிஎம்ஆர்சி இது தொடர்பாக டெல்லி வனத்துறையினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. குரங்குகள் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நுழைவதைத் தடுக்கவும், அண்மையில் ஒரு குரங்கு மெட்ரோ ரயிலிலேயே பயணம் செய்ததுபோன்ற நிகழ்வுகளை முற்றிலுமாகத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த சம்பவத்தின்போது, அந்தக் குரங்கு அக்ஷர்தம் மெட்ரோ நிலையத்தில் ரயிலுக்குள் ஏறியுள்ளது. 3 முதல் 4 நிமிடங்கள் அது ரயிலில் பயணித்தது. அதற்குள் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைக்கவே, விரைந்து செயல்பட்டு அடுத்த நிறுத்தத்திலேயே குரங்கு இறக்கிவிடப்பட்டது" எனத் தெரிவித்துள்ளது.
இதுபோன்று ரயிலில் குரங்கு பயணம் செய்தது இதுவே முதல்முறையென்றாலும் யமுனா கரை மெட்ரோ ரயில் நிலையத்தில் பாம்புகளைப் பார்த்திருப்பதாக சில நெட்டிசன்கள் டிஎம்ஆர்சியை டேக் செய்து தெரிவித்தனர்.
டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் லங்கூர் இனக் குரங்களைப் போல் குரல் எழுப்பக்கூடியவர்களை வேலைக்கு நியமித்து குரங்குகளை விரட்டவும் டெல்லி மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.