'தமிழக முதல்வர்', 'திராவிட இனத்தைச் சேர்ந்தவன்'; ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கில் மாற்றம்

மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கு
மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கு
Updated on
1 min read

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதைத்தொடர்ந்து, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் 'தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்' என மாற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெற்றது. இதில், திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சார்பில் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள் 8 பேர் என்கிற நிலையில் 133 பேருடன் பெரும்பான்மை பெற்ற ஸ்டாலின், ஆட்சி அமைக்க உரிமை கோரியதன் அடிப்படையில், இன்று (மே 07) காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு உள்ளிட்ட 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மற்றும் அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆளுநரின் தேநீர் விருந்திலும் முதல்வர் கலந்துகொண்டார்.

முதல்வராக பதவியேற்ற உடனேயே, மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டது. முன்பு, அவரின் ட்விட்டர் பக்கத்தில், திமுக தலைவர், எதிர்க்கட்சி தலைவர் போன்றவை மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும்.

தற்போது, 'தமிழக முதல்வர்', 'திமுக தலைவர்', 'திராவிட இனத்தைச் சேர்ந்தவன்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுகவை தோற்றுவித்த அண்ணா, 1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, நாடாளுமன்றத்தில் தன் முதல் உரையில், 'நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்' என பேசினார். அந்த உரை தற்போது வரை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வழியில், 'திராவிட இனத்தைச் சேர்ந்தவன்' என்பதை மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.

மேலும், ட்விட்டர் பக்கத்தில் முகப்புப்படமாக 'இனித் தமிழகம் வெல்லும்' என்பது உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in