Published : 09 Apr 2021 07:53 PM
Last Updated : 09 Apr 2021 07:53 PM

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெல்லுமா? - வரும்; ஆனா வராது: நெட்டிசன்கள் சுவாரஸ்ய வாதம்

ஐபிஎல் போட்டியை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வந்த நிலையில், இன்று முதல் போட்டிகள் ஆரம்பமாகின்றன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும், ஆர்சிபியும் மோத உள்ள நிலையில், முதல் போட்டியில் சாம்பியன் அணி வெல்லுமா? என்பதில் சுவாரஸ்யமான இரண்டுவிதக் கருத்துகள் உள்ளன.

ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணியை முழுமையான அணி என்பார்கள். முதல் போட்டியில் எப்போதும் கோப்பையை வென்ற அணியுடன் வேறு அணி மோதும். இம்முறை கோப்பையை வென்ற அணி என்கிற முறையில் மும்பை அணியும், ஆர்சிபியும் மோதுகின்றன. வலுவான அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சற்றும் குறையாத அணியாக ஆர்சிபி உள்ளது.

இந்திய அணியின் மூன்று முக்கிய இளம் பந்துவீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தர், சிராஜ், சைனி ஆகியோர் ஆர்சிபி அணியில் உள்ளனர். மேலும், ஐபிஎல் போட்டியில் முதல் 5 இடங்களில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜேமெசன், மேக்ஸ்வெல் இருவரும் ஆர்சிபி அணியில் உள்ளனர். கோலியின் கேப்டன்ஷிப் என வலுவான அணியாக ஆர்சிபியும் மல்லுக்கட்டுகிறது.

ஆனால், ரசிகர்கள், நெட்டிசன்கள் மத்தியில் இந்தப் போட்டியில் மும்பை அணி வெல்லும், வெல்லாது என்பதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கட்டாயம் வெல்லும் என்ற வாதத்தை நெட்டிசன்கள் முன்வைக்கின்றனர். அதற்குச் சொல்லும் காரணம் 2012 லிருந்து சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றதே இல்லை. ஹோம் கிரவுண்ட் அணி சிஎஸ்கேவால் கூட அவர்களை வெல்ல முடியவில்லை.

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கும் எனச் சிலர் வாதமாக வைக்கிறார்கள். அதற்கு நெட்டிசன்கள் கூறும் காரணம், ரோஹித் ஷர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் வென்றதே இல்லை. கடைசியாக விளையாடிய 8 முதல் போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியுள்ளது. அதனால் இந்தப் போட்டியிலும் தோற்கும் என்கிறார்கள்.

மற்றொரு புறம் கடைசி 5 போட்டிகள் சேப்பாக்கத்தில் ஆடியதில் 5 போட்டிகளையும் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது. ஆனால், ஆர்சிபி கடைசியாக சேப்பாக்கத்தில் ஆடிய 5 போட்டிகளிலும் தோற்றுள்ளது. வரும்; ஆனா வராது என்பதுபோல் இரண்டு விதமான கருத்துகள் நெட்டிசன்களிடம் உலவுகின்றன.

வென்றால் சேப்பாக்கத்தில் தோற்காத அணி என்கிற பெருமையுடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரெக்கார்டு தொடரும். தோற்றால் தொடர்ந்து 9-வது முறையாக முதல் போட்டியில் தோற்ற அணி என்கிற தோல்வி ரெக்கார்டு தொடரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x