

2021-ம் ஆண்டுக்கான நீட் தேர்வுத் தேதியை மத்தியக் கல்வி அமைச்சகம் விரைந்து அறிவிக்க வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கரோனா பரவலால் கடந்த ஆண்டு நீட் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப். 13-ம் தேதி நடத்தப்பட்டது. எனினும், நடப்பாண்டு நீட் தேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கரோனா பெருந்தொற்றுக்கு இடையில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் 2021-ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு முதல் கட்டமாக பிப்ரவரி 23 முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளது. எனினும் நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத்தேர்வான நீட் 2021 குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இதுகுறித்து ஜேஇஇ மெயின் தேர்வு அறிவிப்பின்போதே மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வின்போதாவது நீட் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். எனினும், இதுவரை நீட் 2021 குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் இனியாவது தேர்வு குறித்த அறிவிப்பை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஏராளமான மீம்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் விதமாக நீட் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எழுத்துத் தேர்வாகவே நீட் நடைபெறும் எனவும் அண்மையில் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.