Published : 18 Feb 2021 01:22 PM
Last Updated : 18 Feb 2021 01:22 PM

பெண்ணின் பேச்சால் சங்கடப்பட்ட நாராயணசாமி; ராகுலிடம் மாற்றிச் சொல்லி சமாளிப்பு: வைரலாகும் காணொலி

ராகுல், புதுச்சேரி வருகையின்போது மீனவ கிராம மக்களைச் சந்தித்தார். அப்போது ராகுலிடம் பேசிய ஒரு மீனவப் பெண்மணி, புயலால் பாதிக்கப்பட்டபோது இவர்கூட வந்து எங்களை எட்டிப் பார்க்கவில்லை என முதல்வர் நாராயணசாமி மீது குறை கூறினார். இதனால் சங்கடப்பட்ட நாராயணசாமி, அவர்கள் பாராட்டுகிறார்கள் என்று கூறிச் சமாளித்த காணொலி வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புதுவையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதில் ஒரு பகுதியாக பொதுமக்களைச் சந்தித்தார். மீனவ மக்களை ஒரு இடத்தில் பொதுவெளியில் சந்தித்துப் பேசினார். அப்போது அவரது பேச்சை உடனிருந்த புதுவை முதல்வர் நாராயணசாமி மொழிபெயர்த்தார். இயல்பாக சாதாரணப் பேச்சு வழக்கில் அவர் ராகுலின் பேச்சை மொழிபெயர்த்தார்.

சில இடங்களில் தடுமாறினாலும் பெரும்பாலும் சிறப்பாக மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமியை ஒரு மீனவப் பெண்மணி குறை கூறினார். ''மீனவ மக்களான எங்களை யாரும் வந்து பார்ப்பது இல்லை. புயல் நேரத்தில் மிகுந்த துன்பத்தை அனுபவித்தோம்'' என்று ராகுலிடம் கூறினார். திடீரென முதல்வர் நாராயணசாமியின் பக்கம் கைகாட்டி, ''இதோ இவரே இருக்காரு, புயல் அடித்தபோது எங்களை வந்து பார்க்கவில்லை, என்னென்னு கேட்டாரா?'' என்று அப்பெண்மணி பேசினார்.

இதனால் ஆரவாரம் எழுந்தது. சட்டென்று கிரகித்துக் கொண்ட ராகுல் காந்தி மைக்கை வாங்கி நாராயணசாமியிடம் “இந்தப் பெண் என்ன சொல்கிறார்” என்று கேட்டார். இதனால் சங்கடப்பட்ட நாராயணசாமி, அதை மறைத்துக்கொண்டு “நிரவ், புரெவி புயல் நேரத்தில் நான் இவர்களை வந்து பார்த்ததை அந்தப் பெண்மணி கூறுகிறார்” என்று சமாளித்தார். அவர் மாற்றிச் சொன்னது ராகுலுக்குத் தெரியாது. கூட்டத்தில் உள்ளவர்களும் அதைப் பெரிதாக எடுத்துச் சுட்டிக்காட்டவில்லை.

ஆனால், நெட்டிசன்கள் விடுவார்களா? சமூக வலைதளங்களில் போட்டுக் கிண்டலடித்து வருகின்றனர். தற்போது அந்தக் காணொலி அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதேபோல் மற்றொரு இடத்தில் தங்களுக்குத் தூண்டில் வளைவு அமைத்துத் தரவேண்டும் என்று சொன்னதை, ராகுல் காந்திக்கு சரியாக மொழிபெயர்த்து சொல்லத்தெரியாமல் தடுமாறிய நாராயணசாமி என்னென்னமோ சொல்ல, திருப்தி அடையாத ராகுல் காந்தி வேறொருவரிடம் விளக்கம் கேட்க அவர் விளக்கிச் சொன்னார்.

'தூண்டில் வளைவு எப்படிம்மா அமைப்பாங்க?' என்று மாநில முதல்வர் அந்தப் பெண்ணிடம் அப்பாவியாகக் கேட்டார். அதுவும் மைக்கில் ஒலித்தது சுவாரஸ்யமான ஒன்று. இறுதியாக ராகுல், “நான் அடுத்தமுறை வரும்போது உங்களுடன் படகில் பயணித்து உங்கள் பிரச்சினைகளை அறிந்துகொள்வேன்” என வாக்குறுதி அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x