

கரோனா ஊரடங்கால் 80 வயது முதியவர் உணவுக் கடை வருமானத்தை இழந்து, அழுத வீடியோ இணையத்தில் வைரலானது. அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அனைத்தும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தெற்கு டெல்லியைச் சேர்ந்த 80 வயது முதியவர் கந்தா பிரசாத். தனது மனைவி பாதமி தேவியுடன் சேர்ந்து மால்வியா நகரில் சிறிய அளவில் பாபா கா தாபா என்ற பெயரில் 30 ஆண்டுகளாக உணவுக் கடை நடத்தி வருகிறார். இருவரும் காலை 6.30 மணிக்கு சமைக்க ஆரம்பிப்பர். 9.30 மணிக்கு பருப்பு, குழம்பு, சாதம், பரோட்டா ஆகியவை சுமார் 30- 50 பேருக்குச் சுடச்சுடத் தயாராக இருக்கும்.
தன்னுடைய இரண்டு மகன்கள், மகளை உணவுக் கடை வருமானத்தை வைத்தே வளர்த்து, திருமணமும் செய்து வைத்தார் கந்தா பிரசாத். ஆனால் கரோனா சூறாவளி அவரின் வாழ்க்கையையும் விட்டுவிக்கவில்லை. எல்லோரையும் புரட்டிப் போட்ட ஊரடங்கு அவரின் வருமானத்தையும் பதம்பார்த்தது.
நாளடைவில் 10 ரூபாய் முதல் 50 ரூபாய் மட்டுமே அவருக்கு வருமானம் கிடைத்தது. சமைக்க ஆன செலவைக் கூடச் சமாளிக்கமுடியாமல் திணறினார் பிரசாத். உணவு தொடர்பாக வீடியோ எடுப்பவர் ஒருவர், இவரது கடைக்கு வீடியோ எடுக்கச் சென்றபோது, வெடித்து அழுதார் பிரசாத். இதுதொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலானது.
கிரிக்கெட் வீரர் அஸ்வின், டெல்லி ஐபிஎல், நடிகை சோனம் கபூர், வழக்கறிஞர் சோம்நாத் பாரதி உள்ளிட்ட பலர் அந்த வீடியோவைப் பகிர்ந்தனர். உணவு டெலிவரி செயலியான ஸொமோட்டோவும் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, முடிந்தவர்கள் அங்கு சென்று உணவருந்தலாம் என்று கூறியது. மேலும் பலர், பாபா கா தாபாவில் சாப்பிடும் முதல் 50 பேருக்கு ரொக்கம் அளிக்கப்படும் என்று அறிவித்தனர்.
இந்நிலையில் பாபா கா தாபாவில் இன்று கூட்டம் நிரம்பி வழிந்தது. காலையிலேயே அனைத்து உணவுப் பொருட்களும் விற்றுவிட்டன. இதுகுறித்து கந்தா பிரசாத் கூறும்போது, ''ஊரடங்கில் எந்த விற்பனையும் இல்லை. ஆனால் இப்போது ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களுடன் இருப்பதைப் போல உணர்கிறோம்'' என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.
வீடியோவைக் காண: