

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் மோசமான தொடக்கத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில் ரெய்னா சிஎஸ்கே அணிக்குத் திரும்ப வர வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தான் சந்தித்த முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுடன் விளையாடியதில் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அணி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சிஎஸ்கே அணியிலிருந்து விலகிய ரெய்னா அணிக்குத் திரும்பினால் அணி பலமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #ComeBackRaina என்ற ஹேஷ்டேகுடன் பதிவிட்டு வருகின்றனர். அப்பதிவுகள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த மாதம் 15-ம் தேதி ஓய்வுபெற்ற சுரேஷ் ரெய்னா, தனிப்பட்ட காரணங்களால், ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.