

தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து, பானிபூரி செய்வதற்கான குறிப்பைத் தேடுபவர்கள் எண்ணிக்கை 107 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. மேலும் ஆயுர்வேத மருந்தான கஷாயத்தைக் குடிக்கச் சொல்லி பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அதைத் தயார் செய்வதற்கான குறிப்புகளைத் தேடுவது 90 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஊரடங்கால் உணவகங்கள், க்ளப், சிறிய உணவுக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே இருக்கும் மக்கள், உணவகங்களில் கிடைக்கும் பலகாரங்களை வீட்டிலேயே செய்து பார்க்க முயல்கின்றனர். சமூக வலைதளங்களில் தாங்கள் முயற்சித்த பலகாரம் குறித்து புகைப்படம் குறித்துப் பகிர்வதும் வாடிக்கையாகிவிட்டது.
கடந்த சில மாதங்களாகவே 5 நிமிட சமையல் குறிப்புகளைத் தேடுவது 56 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், ஒட்டுமொத்தமாகவே சமையல் குறிப்புகள் தொடர்பான தேடல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்றும் கூகுள் அறிக்கை தெரிவித்துள்ளது.
வைட்டமின் சி தொடர்பான தேடல் 150 சதவீதம் அதிகரித்துள்ளது. கஷாயம், சீந்தில் (இலை) என பல்வேறு ஆயுர்வேதம் தொடர்பான தேடல்களும் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றோடு இணையத்தில் மின்சாரக் கட்டணம் கட்டுவது எப்படி (180 %), என் வீட்டுக்கு அருகிலிருக்கும் மருந்தகம் (58%), என் வீட்டுக்கு அருகில் மளிகைப் பொருட்கள் டெலிவரி (550%), ரேஷன் கடை (300%), வீட்டிலேயே ஜிம் (93%), இணையத்தில் கற்றல் (85%), இணையத்தில் கற்பித்தல் (148%), வீட்டிலேயே கற்றல் (78%), க்யூ ஆர் குறியீடு கட்டண முறை (66%), யுபிஐ பின் மாற்றுவது எப்படி (200%) உள்ளிட்ட பிரிவுகளிலும் கூகுள் தேடல்கள் அதிகரித்துள்ளன.