

சர்வதேச அளவில் பூமி நாள் ஏப்ரல் 22-ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. எல்லா உயிர்களுக்கும் தாய் மண்ணான பூமிக்கு நன்றியைச் செலுத்தும் பல நிகழ்வுகள் அவரவரின் கற்பனைக்கு ஏற்ப நடத்தப்பட்டன.
எர்த் டே நெட்வொர்க் சார்பாக அம்ரித் ராம்நாத் இசையமைத்து தயாரித்திருக்கும் “தர்த்தி மா..”, பூமித் தாய்க்கு அனைத்து உயிர்களின் சார்பாக நன்றியையும் வணக்கத்தையும் உள்ளன்போடு தெரிவிக்கும் காணொலி இது. பூமித் தாயின் பெருமையை எட்டுத் திசைக்கும் எதிரொலிக்கும் இந்தக் காணொலியில் எட்டு மொழிகளில் எழுதப்பட்ட பாடல்களை அபய் ஜோத்புர்கார், அபிசேக் ரகுராம், பாம்பே ஜெயஸ்ரீ, ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், கௌசிகி சக்ரவர்த்தி, மகேஸ் கேல், எம்.டி.பல்லவி, சங்கர் மகாதேவன், ஸ்வேதா மோகன் ஆகியோர் தங்களின் இனிமையான குரலால் பாடியிருக்கின்றனர்.
தமிழ்ப் பாடலின் வரிகளை மதுரந்தகியும் மலையாளப் பாடலின் வரிகளை சீஜித் நம்பியாரும் பஞ்சாபி, கன்னடம், இந்தி மற்றும் மராட்டியம், குஜராத்தி, வங்கம் ஆகிய மொழிப் பாடல்களின் வரிகளை முறையே விது பூர்கயஸ்தா, சைத்ரா சாய்ராம், சேத்னா சீகாந்த், கார்த்திக் தலால், கௌசிகி சக்ரபர்த்தி ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.
“பூமித் தாய்க்கு வணக்கம். நாங்கள் உன்னையே நம்பியிருக்கிறோம். உன்னிடமே அடைக்கலமாகியிருக்கிறோம்” எனக் கேட்பவரை உருக்குகிறது வங்க மொழிப் பாடலின் வரிகள்.
“அழகான பூமியே. என்னுடைய ஆத்மார்த்தமான நன்றி. நாங்கள் உனக்குச் செய்த கெடுதல்களை மன்னித்து எங்களைக் காப்பாற்று. இந்தப் பூமியில் அனைத்து உயிர்களையும் மன்னித்துக் காப்பாற்று” என்று வேண்டுவதோடு, பூமிப் பந்துக்கு நாம் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தமும் கேட்கிறது மலையாள மொழிப் பாடலின் வரிகள்.
“மண்ணில் மரமாக விண்ணில் மழையாக, நலமே நல்கும் இயற்கையே, தாய்மையின் வடிவாக தெய்வத்தின் நிழலாக, நடந்தாய் என்றென்றும் வாழியவே!” என்று நம்மைத் தாலாட்டும் பூமியையே தாலாட்டுகிறது தமிழ் மொழியின் வரிகள்.
பூமியின் பெருமைக்கு நன்றிகளை காற்றில் தவழவிடும் இந்தக் காணொலியைக் காண: