

சர்வதேச யூடியூப் நட்சத்திரமான ப்யூடிபை (PewDiePie) தான் சில காலம் ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக ஒரு வீடியோவையும் பதிவேற்றியுள்ளார்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஃபெலிக்ஸ், யூடியூபில் ப்யூடிபை என்ற சேனலின் மூலம் பிரபலமானவர். கிட்டத்தட்ட 10.2 கோடி சந்தாதாரர்களுடன், யூடியூபில் அதிக சந்தாதாரர்கள் (subscribers) இருக்கும் சேனல்களில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக (2013-2019) முதலிடத்தில் இருந்தவர். இவரது சேனலில் பிரதானமாக வீடியோ கேம் விமர்சனங்கள், நகைச்சுவைப் பதிவுகள், இசைப் பதிவுகள் என பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன.
கடந்த ஜனவரி 15 ஆம் தேதி இவர் பதிவேற்றிய வீடியோவில் தான் யூடியூபிலிருந்து ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இது அவரது லட்சக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த வீடியோவில், "நான் இந்த ஒவ்வொரு நொடியையும் ரசிக்கிறேன். உண்மை என்னவென்றால் எனக்கு ஓய்வெடுக்க விருப்பமில்லை. எனக்கு வீடியோக்கள் எடுப்பது பிடிக்கும். ஆனால் இதை இப்போது செய்ய வேண்டிய தேவை இருப்பதாக நான் நினைக்கிறேன்.
எனது வீடியோக்களைப் பார்த்ததற்கு நன்றி. இவ்வளவு வருடங்களாக என் வீடியோக்களைப் பார்த்ததற்கு நன்றி. அது எனக்குச் சந்தோஷத்தைத் தந்துள்ளது. எனக்கு வீடியோக்கள் எடுப்பது, உங்களுடன் பேசுவது பிடிக்கும். ஆனால் இந்த வருடம் நிறைய விஷயங்கள் சேர்ந்துவிட்டன. எனவே நான் சற்று நிதானிக்க வேண்டும். பிறகு நான் இன்னும் 10,000 சதவீதம் திரும்புவேன். நான் என்று திரும்புவேன் என்று எனக்குத் தெரியாது" என்று கூறியுள்ளார்.
ப்யூடிபை வெளியிட்ட வீடியோவுக்கான பதிலாக, சமூக வலைதளங்களில் பல்வேறு உணர்ச்சிகரமான மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன.