பெண்களின் தற்காப்புக்கு உதவும் பெப்பர் ஸ்பிரே: வீட்டிலேயே செய்வது எப்படி?- வைரலாகும் ஐபிஎஸ் அதிகாரியின் விளக்க வீடியோ

பெண்களின் தற்காப்புக்கு உதவும் பெப்பர் ஸ்பிரே: வீட்டிலேயே செய்வது எப்படி?- வைரலாகும் ஐபிஎஸ் அதிகாரியின் விளக்க வீடியோ

Published on

பெண்கள் தற்காப்புக்காக பெப்பர் ஸ்பிரேவைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவில் பெப்பர் ஸ்பிரேவை வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது என்பதற்கான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.

ஹைதராபாத் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார். அவர் பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்க, சட்டப் போராட்டம் நடத்திய நிலையில், மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டார். இதில் 90% தீக்காயம் அடைந்த அப்பெண் நேற்றிரவு பலியானார்.

இவ்வாறு நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் பெண்கள் தங்களுக்கு நேரும் ஆபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வுக் குரல்கள் சமூக வலைதளங்களில் வலுவாக எழுந்து வருகின்றன.

அந்த வகையில் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பெப்பர் ஸ்பிரேவைப் பயன்படுத்த வேண்டும் என்று இமாச்சலப் பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த சவுமியா சபாசிவன் 2017 ஆம் ஆண்டு பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவ்வீடியோவில் உள்ளூர் இளம் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே பயன்படுத்த வேண்டியதின் அவசியத்தை சவுமியா விளக்குகிறார். மேலும் பெப்பர் ஸ்பிரேவை செய்வதற்கான வழிமுறைகளையும் சவுமியா விளக்கியுள்ளார்.

வீட்டிலேயே பெப்பர் ஸ்ப்ரே செய்வதற்கான வழிமுறைகள்:

மிளகாய்ப் பொடி (தேவையான அளவு), மிளகுப் பொடி ( மிளகாய்ப் பொடியை விட சற்று குறைவான அளவு) இதனை எண்ணெயுடன் நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இதில் மிளகாய்ப் பொடி முகத்தில் பட்டவுடன் எரிச்சலை உண்டாக்கும். மிளகுப் பொடி மூக்கின் வழியாக நுகரப்பட்டு காரத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தும்.

மேலும் இதனுடன் அசிட்டோனையும் (கெடாமல் இருக்க) சேர்க்க வேண்டும். பின்னர் இதனை நன்கு கலக்கி வடிகட்டி எடுத்து காலியான ஸ்பிரே பாட்டில்களில் பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவை ஒருவருடத்திற்கு கெடாமல் இருக்கும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in