

இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து நீண்ட தூரம் ஒரே மாதிரியாக அமர்ந்து கார் ஓட்டிய டெல்லியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியுள்ளார்.
இறுக்கமான ஜீன்ஸ் தான் சந்தையின் இப்போதைய புதிய ட்ரெண்ட். அந்த ட்ரெண்டில் ஏராளமான இளைஞர்களும் யுவதிகளும் தாராளமாக தங்களைப் புகுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த் ட்ரெண்ட் தந்த உபாதையால் தொழிலதிபர் ஒருவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 30 வயதான தொழிலதிபர் சவுரவ் சர்மா. இவர் அண்மையில் தனது தானியங்கி சொகுசு காரில் 8 மணி நேரம் தொடர்ச்சியாக ரிஷிகேஷுக்கு பயணித்துள்ளார். பிரச்சினை அதுவல்ல. பயணத்தின்போது அவர் அணிந்திருந்த இறுக்கமான ஜீன்ஸ் தான் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ரிஷிகேஷ் பயணத்திற்குப் பின்னர் சவுரவ் சர்மாவுக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அதை அவர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் அலுவலகத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு மிக மிக குறைந்த நிலையில் இருந்தது. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் உயர் சிகிச்சை வழங்கின. சுமார் 6 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் அவர் உயிர் பிழைத்துள்ளார்.
இது குறித்து சர்மா அளித்த பேட்டியில், "நான் டெல்லியில் இருந்து எனது புதிய காரில் நண்பர்களுடன் ரிஷிகேஷுக்கு சென்றேன். எங்கேயும் நிறுத்தவில்லை. 8 மணி நேரத்திற்கும் மேலாக எங்களின் பயணம் நீண்டது. அப்போது எனது காலில் கடுமையான வலி ஏற்பட்டது.
சில மருந்துகளை தடவிவிட்டு அலுவலகத்துக்கு சென்றுவிட்டேன். அங்கு, மயங்கி விழுந்தேன். நண்பர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றதாக பின்னர் சொன்னார்கள். மருத்துவர்கள் என்னிடம் விசாரித்தபோது அண்மையில் மேற்கொண்ட பயணம் பற்றி சொன்னேன். அவர்கள் சொல்லவே எனக்கு நேர்ந்த தாக்கம் இறுக்கமான ஜீன்ஸின் விளைவு என்பது தெரிந்தது" என்றார்.
சவுரவுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையின் இயக்குநர் கூறுகையில், "அசவுகரியமான உடை அணிந்தபடி மணிக்கணக்கில் ஒரு கோணத்தில் அமர்ந்திருந்ததால் சவுரவின் ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளது. இதன் எதிர்வினையாக இதயத்திலும், நுரையீரலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயத் துடிப்பும் குறைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
எனவே, இளைஞர்களே, யுவதிகளே இனி காலை இறுக்கும் டைட் ஜீன்ஸ் அணியும்போது கவனமாக இருங்கள்.