சென்னை பூங்கா ஸ்டேஷனில் சுவாரஸ்யம்; உள்ளங்கவர்ந்த சின்னப்பொண்ணு... ரோந்துப்பணியில் போலீஸாருக்கு உதவும் தெருநாய்

சின்னப்பொண்ணு - படம்: பா.ஜோதிராமலிங்கம்.
சின்னப்பொண்ணு - படம்: பா.ஜோதிராமலிங்கம்.
Updated on
2 min read

சென்னை

ரயில் நிலையங்களில் தெருநாய்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பதை நாம் வெகு சாதாரணமாக பார்க்க முடியும், ஆனால் சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருக்கும் சின்னப்பொண்ணு அவ்வாறாக அலைந்து திரியும் நாய்களில் ஒன்றல்ல. அது சற்று வித்தியாசமான நாய். ரயில் நிலைய நடைமேடையே தனக்குச் சொந்தம் தன்னுடைய ஆளுமையின் கீழ்தான் வருகிறது என்பது போன்ற ஒரு மதர்ப்பான நடையுடன் ரயில்வே நடைமேடையை சுற்றி வருகிறது.

காவல் பணியை அதற்கு கொடுத்தது போலவும் பயணிகள் பாதுகாப்பு தன் கையில்தான் உள்ளது போலவும் அதன் செயல்கள் அமைந்துள்ளது. ரயிலில் ஆபத்தான முறையில் தொங்கிச் செல்லும் பயணிகளை குரைத்து எச்சரிப்பதும், ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடப்பவர்களை குரைத்து தடுப்பதும் அதன் வேலையாக உள்ளது.

அதனால்தான் என்னவோ அதற்கு காக்கிச்சட்டை காவலர்களை மிகவும் பிடிக்கிறது. அவர்கள் ரோந்துச் சென்றால் உடன் ரோந்துச் செல்வது, காவலர்களுடனே சுற்றுவது என வாடிக்கையாக வைத்துள்ளது. காவலர்களுக்கும் இந்த நாய் மிகவும் பிடித்தமான ஒன்று. அதை ஆசையுடன் தன்னுடன் ரோந்துக்கு அவர்கள் அழைத்துச் எல்கின்றனர்.

சின்னப்பொண்ணு நடைமேடை கடைவாசிகள் முதல் ரயில்வே காவலர்கள் வரை அனைவரின் அபிமானம் பெற்றதாக இருக்கிறது. பயணிகளை அது எப்போதும் இடையூறு செய்வதில்லை.

அனைவரின் அபிமானத்தையும் சின்னப்பொண்ணு பெறக் காரணம் அதன் புத்திக்கூர்மை. இது குறித்து, சென்னை பார்க் ரயில் நிலையத்தின் ரயில்வே தலைமைக் காவலர் ஜி.சி.டி.சிரஞ்சீவி கூறும்போது, "மின்சார ரயில்களில் படியில் நின்று பயணிப்பவர்களையும், தண்டவாளங்களைக் கடந்து பிளாட்பார்ம்களில் ஏறுபவர்களையும் ரயில்வே நாங்கள் எச்சரிப்பது வழக்கம்.

லத்தியை சுழற்றியும் ஓங்கி குரல் கொடுத்தும் நாங்கள் அவ்வாறு எச்சரிப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த சின்னப்பொண்ணு அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை குரைத்து விரட்டத் தொடங்கியது. தானாகவே அது பயிற்சி பெற்றுக் கொண்டது.

எதுவும் கற்றுக் கொடுக்காமலேயே பணிக்காமலேயே வேலை செய்யும் சின்னப்பொண்ணு அதிகாரப்பூர்வமாக ரயில்வே காவல் படையில் ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால், தினமும் கடமை தவறாமல் பணியாற்றுகிறது” என்றார்.

"ஒவ்வொரு நாளும் வெவ்வேறு காவலர்கள் பகல், இரவு என ஷிப்ட் அடிப்படையில் வேலை பார்த்தாலும், சின்னப்பொண்ணுக்கு மட்டும் 24 மணி நேர டூட்டிதான். காவல்துறையினர் காக்கி உடையைப் பார்த்தால் போதும் அவர்கள் பின்னால் சென்று தன்னை உதவியாளராக மாற்றிக் கொள்வாள் சின்னப்பொண்ணு" என நடைமேடை கடைக்காரர் செந்தமிழன் கூறுகிறார்.

ஒருமுறை பயணியிடமிருந்து செல்போனை பறித்துச் சென்ற நபரை துரத்திப் பிடித்து காவல்துறையினருக்கு சின்னப்பொண்ணு உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு கடைக்காரர் சுரேஷ்பாபு பேசும்போது, "சின்னப்பொண்ணை வளர்த்த யாரோ பராமரிக்க முடியாமல் ரயில் நிலையத்தில் கொண்டுவந்து விட்டுச் சென்றுள்ளனர். ஒருமுறை தன்னை விட்டுச் சென்ற உரிமையாளரை அடையாளம் கண்டு அது அன்பின் ஒலி எழுப்பியபோதுதான் அவரை நாங்கள் பார்த்தோம்.

அவர் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். வீட்டு உரிமையாளருடனான பிரச்சினை காரணமாக அவ்வாறு விட்டுச் சென்றார் என்பதும் அவர் கூறியே எங்களுக்குத் தெரியவந்தது. அவர்தான் அந்த நாயின் பெயர் சின்னப்பொண்ணு என்பதையும் கூறினார். மாதம் ஒருமுறை அவர் சென்னை வந்து சின்னப்பொண்ணை பார்த்துச் செல்கிறார்" என்றார்.

காவல் பணியில் உள்ள நாய்களுக்கு சம்பளம் உண்டு, பராமரிப்பு உண்டு. ஆனால் பிரதிபலன் பாராமல் நாயாய் உழைக்கிறாள் இந்த சின்னப்பொண்ணு என்றால் அது மிகையாகாது.

-டெனிஸ் எஸ். ஜேசுதாசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in