Published : 12 Nov 2019 12:30 PM
Last Updated : 12 Nov 2019 12:30 PM

பேரிடர் நிவாரணத் தொகையை காலால் வழங்கிய மாற்றுத்திறனாளி: இன்முகத்துடன் ஏற்று செல்ஃபி எடுத்துக்கொண்ட பினராயி

திருவனந்தபுரம்

கேரள முதல்வர் பினராயி விஜயனை ட்விட்டர் உலகம் கொண்டாடத் தொடங்கியுள்ளது. காரணம், இருகரங்களையும் இழந்த மாற்றுத்திறனாளி ஒருவர் தனது காலால் வழங்கிய பேரிடர் நிவாரணத் தொகைக்கான காசோலையை மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு அந்த இளைஞருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பக்குவம்.

கேரள மாநிலம் அண்மையில் அடுத்தடுத்து இருமுறை இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து முதல்வரின் நிவாரண நிதிக்கு மக்கள் தாராளமாக நிதியளிக்கலாம் என அறைகூவல் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், பேரிடர் நிவாரண நிதி கொடுப்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார் பிரணவ் என்ற இளைஞர். அந்தச் சந்திப்பும் புகைப்படமும்தான் இப்போது வைரலாகி வருகின்றன.

புகைப்படங்கள் வைரலாக பிரணவ் பிரபலம் இல்லை. சாமானியரே. ஆனால் அந்தச் சந்திப்பை பேச வைத்திருப்பது முதல்வரின் அணுகுமுறை.

இளைஞர் பிரணவுடனான சந்திப்பு குறித்து கேரள முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று காலை ஆலத்தூரைச் சேர்ந்த பெயின்டர் பிரணவ் என்னைச் சந்தித்தார். அது இதயத்தைத் தொடும் சந்திப்பு. எனது அலுவலகத்தில் என்னைச் சந்தித்த பிரணவ், முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பைக் கொடுத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு கேரள அரசு நல்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்'' எனப் பதிவிட்டுள்ளார்.

கூடவே பிரணவ் உடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் எல்லாம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பினராயி விஜயன் இளைஞர் பிரணவின் கால் விரல்களைக் குலுக்கி வரவேற்பதும், கால்களால் அளிக்கும் நிவாரணத் தொகையைப் பெறுவதும், பின்னர் காலில் செல்போனை இயக்கி இளைஞர் எடுக்கும் செல்ஃபிக்கு போஸ் கொடுப்பதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x