

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ’கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சில நாட்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து இடம்பெறாமல் இருப்பதால் ரசிகர்கள் பலர் கவலை அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தோனியை மீண்டும் கிரிக்கெட் விளையாட அழைக்கும் வகையில் ஹேஷ்டேக் ஒன்று ட்ரெண்ட் ஆனது.
நாக்பூரில் இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் வங்கதேசம் அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இந்த ஆண்டில் உள்நாட்டில் முதல் முறையாக டி20 தொடரைக் கைப்பற்றியது.
இப்போட்டியில் தோனிக்கு மாற்று என்று கூறப்படும் இளம் வீரர் ரிஷப் பந்த் தொடர்ந்து மோசமான ஷாட்களால் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இந்திய ரசிகர்கள், #DhoniWeMissYouOnField என்ற ஹேஷ்டேக்கில் தோனியின் கிரிக்கெட் சாதனைகளைக் குறிப்பிட்டு அவரது படங்களை வெளியிட இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
இந்திய, வங்கதேச அணிகளுக்கு இடையே வரும் 22-ம் கொல்கத்தாவில் நடைபெற உள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி சிறப்பு வர்ணனையாளராகப் பங்கேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.