

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு நாக்பூர் போலீஸார் ட்விட்டரில் பதிவிட்ட பதில் ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.
சமூக வலைதளப் பக்கங்களை நெட்டிசன்கள் நகைச்சுவைக்காகப் பயன்படுத்தி வந்த நிலை மாறிவிட்டது. தற்போது அரசு சார் நிறுவனங்களில் சமூக வலைதளப் பக்கங்களை விழிப்புணர்வுக்காகவும், பொதுமக்களிடையே உரையாடல் ஏற்படுத்துவதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை மும்பை போலீஸார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுக்குரிய முறையில் செய்து வருகின்றனர். மும்பை போலீஸாரைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயங்கும் போலீஸாரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் குடிமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நாக்பூர் போலீஸார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதில் ஒன்று வைரலாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், தொலைபேசியைக் கையில் பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, ''என்ன எண் இது? .. உங்கள் சிரிப்பின் எண் என்ன? உங்கள் ஸ்டைலின் எண் என்ன?'' என்று குறிப்பிட்டிருந்தார்.
ரன்வீர் சிங்கின் இந்தப் பதிவைக் குறிப்பிட்டு நாக்பூர் போலீஸார் அவசர உதவிக்கு அழைக்கும் எண்ணான 100 ஐக் குறிப்பிட்டு பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து இப்பதிவு வைரலானது.