Published : 07 Nov 2019 11:45 AM
Last Updated : 07 Nov 2019 11:45 AM

ஒருநாள் கிரிக்கெட் போட்டியைக் காணவந்த ஆப்கன் கிரிக்கெட் ரசிகர்: உயரத்தால் தங்க இடம் கிடைக்காமல் தவித்த பரிதாபம்

லக்னோ

ஆப்கானிஸ்தான் - மேற்கு வங்க அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியைக் காணவந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது உயரத்தால் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் தவித்தது தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் ஷேர்கான். இவர் தீவிர கிரிக்கெட் ரசிகர். கிரிக்கெட் போட்டியைக் காண கடந்த செவ்வாய்க்கிழமை லக்னோ வந்தார்.

அவருக்குத் தங்குவதற்கு எந்த ஒரு ஓட்டலிலும் அறை கிடைக்கவில்லை. காரணம் அவரது உயரம். 8 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட ஷேர்கான் நகரின் பல்வேறு விடுதிகளுக்கும் ஏறி இறங்கிவிட்டார். அவர் சென்ற இடமெல்லாம் அவரைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமே வேடிக்கை பார்க்கக் குவிந்தது. இதனால் ஷேர்கான் தர்மசங்கடமான நிலைக்கு ஆளானார்.

இதனையடுத்து அவர் போலீஸாரின் உதவியை நாடினார். போலீஸார் அவரை நக்கா பகுதியில் உள்ள ராஜ்தானி விடுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு அறையும் அமைந்தது. ஆனால், உயரமான அந்த மனிதர் குறித்த செய்தி பரவ விடுதி வாசலில் 200-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

அவருடைய அசாதாரண உயரத்தைக் காண கூட்டம் கூடியதால் விடுதியில் இருந்து விளையாட்டு மைதானத்துக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. மீண்டும் காவல்துறை அவருக்கு உதவிக்கரம் நீட்ட, விடுதியிலிருந்து மைதானத்துக்கு ஷேர்கான் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

இவர் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்னும் 4 நாட்கள் அவர் லக்னோவில்தான் இருப்பார் என்பதால் அவரைக் காண தொடர்ந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வதாக விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x