

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய தேர்வுக்குழுவினர் கேப்டன் விராட் கோலி மனைவிக்குத் தேநீர் ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தனர் என விமர்சித்த முன்னாள் வீரர் ஃபரூக் இன்ஜினியருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அனுஷ்கா.
பாலிவுட் நடிகையும் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா மீது விமர்சனங்கள் வருவது இது முதன்முறையல்ல.
இந்த முறை மவுனம் கலைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி நீண்ட விளக்கத்தை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக புனேவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஃபரூக் இன்ஜினியர், "இந்தியத் தேர்வுக்குழு ஒரு மிக்கி மவுஸ் தேர்வுக் குழு. அதன் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்தைத் தவிர அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களை யாருக்கும் தெரியாது.
இந்தத் தேர்வாளர்களுக்கு ஒன்றும் தெரியாது. உலகக்கோப்பை போட்டியின் போது தேர்வுக்குழுவைச் சேர்ந்த ஒருவர் அனுஷ்கா ஷர்மாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்துகொண்டிருந்தார்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஃபரூக் பேசியது தொடர்பாக நீண்ட விளக்கத்தை அனுஷ்கா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், "என்னைப் பற்றி வெளியாகும் அவதூறு செய்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. எப்போதுமே மவுனத்தையே பதிலாக அளித்து வந்தேன். கடந்த 11 ஆண்டுகளாகவே இதைநான் பின்பற்றுகிறேன். விராட் கோலியும் நானும் காதலித்தபோதே அவருடைய ஆட்டத்திறன் தொடர்பாக என்னை விமர்சித்தனர்.
நாங்கள் திருமணம் செய்துகொண்ட பின்னர் இன்னும் சில பழிகள் சேர்ந்துவந்தன. இது இன்றும் தொடர்கிறது. நான் அமைதியா இருக்கிறேன் பலவீனமாக இல்லை.
உலகக்கோப்பை போட்டியின் போது எனக்குத் தேர்வாளர்கள் டீ கொடுத்தார்கள் என கதை கட்டுகிறார்கள். உலகக்கோப்பை தொடரின்போது நான் ஒரு போட்டியை மட்டுமே மைதானத்தில் நேரில் வந்து பார்த்தேன். அதுவும்கூட குடும்பத்தினர் அமர்ந்து பார்க்கும் இடத்திலிருந்தே பார்த்தேன்.
தேர்வாளர்களை விமர்சிக்க வேண்டும் என்றால் அதை நீங்கள்(ஃபரூக்) தாராளமாகச் செய்யலாம். அதில் எதற்காக என்னுடைய பெயரைப் பயன்படுத்துகிறீர்கள்.
என்னைப் பற்றிய அவதூறுகள் தொடர்வதால்தான் நான் மவுனம் கலைக்க வேண்டியாகிவிட்டது. ஒருவரின் அமைதியை நீங்கள் பலவீனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
கடைசியாக ஒன்றை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் ஃபரூக், நான் காபி குடித்தேன்" என அதில் தெரிவித்துள்ளார்.