

தெலங்கானா
தெலங்கானாவில் பழங்குடியினப் பெண்களுடன் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அம்மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். ஏற்கெனவே நிகழ்ச்சியொன்றில் தெலுங்கில் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மற்றொரு நிகழ்ச்சியில் பெண்களுடன் நடனமாடி அசத்தினார்.
இந்நிலையில், தெலங்கானாவில் அம்மாநில பழங்குடியின நலத்துறை அதிகாரிகளுடன் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று (அக்.22) ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை தொடங்குவதற்கு முன்னதாக, ஆளுநர் மாளிகைக்கு வந்திருந்த பழங்குடியினப் பெண்களுடன் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துரையாடினார். இதன் பின்னர், தமிழிசை சவுந்தரராஜன் அப்பெண்களுடன் இணைந்து பழங்குடியினரின் பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தார்.
பழங்குடியின பாரம்பரிய இசை வாத்தியங்களுக்கு ஏற்ப அப்பெண்களுடன் கையை கோத்துக்கொண்டு நடனமாடிய காட்சிகளை தமிழிசை சவுந்தரராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், பழங்குடியினப் பெண்களுடன் நடனமாடியது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.