

ஈரானில் தெய்வ நம்பிக்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக, அந்நாட்டின் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரானைச் சேர்ந்தவர் சஹர் தாபர் (22). இவர் ஈரானின் இன்ஸ்டாகிராம் பிரபலமாக அறியப்படுகிறார்.
சஹர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மிகவும் வித்தியாசமான முறையில் ஒப்பனை செய்து, படங்களை வெளியிடுவார். மேலும் முக அறுவை செய்ததன் காரணமாக அவர் சற்று விகாரமான தோற்றத்தில் இருந்ததால், அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமானது. தனது வித்தியாசமான படங்களில் குறைந்த நாட்களிலேயே இன்ஸ்டாகிராமில் சஹர் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் சஹர் தாபர், தெய்வ நம்பிக்கைகளுக்கு எதிராகவும் ஈரான் கலாச்சாரத்துக்கு எதிராகவும் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அங்கு ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதில் இன்ஸ்டாகிராம் மட்டும் அங்கு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களை, ஈரான் அரசு அச்சுறுத்தி வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.