Published : 04 Oct 2019 04:48 PM
Last Updated : 04 Oct 2019 04:48 PM

வறுமை காரணமாக ஷூ வாங்க முடியாமல் இருந்தேன்: இந்தியாவின் நட்சத்திர தடகள வீராங்கனை ஹிமா தாஸ்

குடும்ப வறுமை காரணமாக ஷூ வாங்க முடியாமல் இருந்ததாக இந்திய நட்சத்திட தடகள வீராங்கனை ஹிமா தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தடகளத் துறையில் நட்சத்திரமாகி இருக்கிறார் ஹிமா தாஸ். சமீபத்தில் செக் குடியரசு நாட்டில் நடந்த தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றது உட்பட தனது தங்க வேட்டையைத் தொடர்ந்து வருகிறார் ஹிமா தாஸ்.

இந்நிலையில் தடகளத் துறையில் தான் சாதிப்பதற்கு முன்னர் கடந்து வந்த பாதையை Humans of Bombay என்ற பிரபல ஃபேஸ்புக் பக்கத்தில் ஹிமா தாஸ் பகிர்ந்துள்ளார்.

அதில் ஹிமா தாஸ் கூறியதாவது:

“என்னுடைய பெற்றோர்கள் இருவரும் விவசாயிகள். நாங்கள் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தோம். எங்களிடம் போதுமான பணம் இல்லாதபோது என்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்பாக இருக்கும்படி எப்போதும் என் பெற்றோர் கூறுவர்.

நான் பள்ளிக்கூடம் படித்த காலகட்டத்தில் கால்பந்தாட்டப் பயிற்சி ஆட்டங்களில் ஷூ அணியாமல் கூட பங்கேற்றேன். என்னுடைய ஓடும் வேகத்தைக் கண்டறிந்து, எனது இயற்பியல் ஆசிரியர் ஊக்கப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து நான் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றேன். தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றது எனக்கு பல கதவுகளைத் திறந்தது. இதனைத் தொடர்ந்து எனக்குப் பயிற்சியாளர்கள் கிடைத்தார்கள். அதற்குப் பிறகு நான் அசாமில் பயிற்சி முகாமில் சேர்ந்தேன்.

நான் இந்தியா சார்பாக 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுத் தந்தேன். இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் பெற்றுத் தந்த முதல் நபர் நான்தான்.

தற்போது எனக்கு அர்ஜுனா விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ளது. நான் இந்தியாவுக்காக பல பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளேன். லட்சகணக்கான மக்கள் என்னைக் கண்டு பெருமை கொள்வதாகக் கூறுகிறார்கள்”.

இவ்வாறு ஹிமா தாஸ் தெரிவித்தார்.

இந்தப் பதிவு நெட்டிசன்கள் பலரால் அதிக அளவில் பகிரப்பட்டது. மேலும் ஹிமா தாஸ் இந்நாட்டின் இளம் பருவத்தினருக்கு உதாரணமாக இருக்கிறார் என்றும் பலரும் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x