

கடந்த வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் தான் ஆற்றிய உரை உலகின் கவனத்தை ஈர்க்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எண்ணியிருந்திருக்கலாம்.
ஆனால், அவரது உரைக்குப் பதிலளிக்கும் உரிமையை (ரைட் டூ ரிப்ளையை) பயன்படுத்தி இந்திய வெளியுறவு அதிகாரி விதிஷா மைத்ரா முன்வைத்த கேள்விகள் இம்ரான் கான் பேச்சைத் தவிடுபொடியாக்கியதோடு ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முன்னதாக ஐ.நா. பொதுச் சபையில் பேசிய இம்ரான் கான், "காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று இந்த உலகம் கவனிக்க வேண்டும். அங்கு 80 லட்சம் காஷ்மீரிகளை இந்திய அரசு சிறை வைத்துள்ளது.
காஷ்மீரில் இருந்திருந்தால் நானே ஒரு துப்பாக்கியை எடுத்திருப்பேன். மீண்டும் புல்வாமா போன்ற தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. ஓர் ஆணு ஆயுதப் போர் நடக்க வாய்ப்புள்ளது. இதனைத் தடுப்பது குறித்த கடமை மற்றும் பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு உள்ளது" என்று எச்சரிக்கும் தொனியிலேயே பேசினார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த விதிஷா மைத்ரா, "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இன்றைய பேச்சு இந்த உலகம் இரக்கமற்றது என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா - பாகிஸ்தான், பணக்காரர் - ஏழை, வடக்கு - தெற்கு, வளர்ந்த - வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகள், முஸ்லிம் - முஸ்லிம் அல்லாத தேசங்கள் என பிரிவினையத் தூண்டும் பேச்சு அது. மொத்தத்தில் வெறுப்புப் பேச்சு.
ரத்தக்களரி, இனவாதம், துப்பாக்கியைத் தூக்கு, இறுதிவரை போராடு போன்ற அவரின் வார்த்தைப் பயன்பாடுகள் மத்திய கால சிந்தனையைக் கொண்டதாக இருக்கிறதே தவிர தற்காலத்துக்கான ஜனநாயக சிந்தனை கொண்டதாக இல்லை.
அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற அவரது எச்சரிக்கைப் பேச்சு தலைவரின் பேச்சுக்கான அழகைக் கொண்டதாக இல்லை. ஐ.நா.வால் பயங்கரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்ட இயக்கங்களின் புகலிடமாக பாகிஸ்தான் இல்லை என்பதை பிரதமர் இம்ரான் கானால் நிரூபிக்க இயலுமா? அதேபோல், ஒசாமா பின் லேடனை பகிரங்கமாக ஆதரித்தவர் இல்லை என்று அவரால் சொல்லிக் கொள்ள இயலுமா?
பாகிஸ்தான், 1947 23%-ல் இருந்த சிறுபான்மையின மக்களின் மக்கள் தொகையை தற்போது 2019-ல் 3%-ஆக குறைத்திருக்கிறது" என்று சரமாரியாக விளாசினார்.
அவரின் இந்தப் பேச்சு யார் அந்த விதிஷா மைத்ரா என்ற தேடலுக்காக கூகுளைப் பலரையும் அணுக வைத்திருக்கிறது.
யார் இந்த விதிஷா?
* விதிஷா மைத்ரா 2008-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுதி இந்திய அளவில் 39-வது இடத்தைப் பிடித்தார்.
* 2009-ம் ஆண்டு, இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரியாக விதிஷா மைத்ரா தனது பணியைத் தொடங்கினார்.
* தற்போது வெளியுறவு அமைச்சக முதன்மை செயலாளராகப் பணியாற்றுகிறார்.
* ஐ.நா.வின் அரசியல் மற்றும் அமைதிக்கான பிரிவிலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடர்பான அம்சங்களை ஆராய்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் ஜூனியர் அதிகாரியாக விதிஷா மைத்ரா பணியாற்றி வருகிறார்.
* ஜூனியர் கேடரில் இருந்தாலும், தனது திறமையால் கவனம் ஈர்த்துள்ளார் மைத்ரா.