

ராமாயணம் குறித்த பதில் தெரியாததால் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நெட்டிசன்களால் கிண்டலுக்கு உள்ளானார்.
அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும், 'க்னோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் பங்கேற்பாளரான ருமா தேவி என்பவருடன் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சோனாக்ஷியிடம் ராமயணத்தில் அனுமன் சஞ்சீவி மூலிகையை யாருக்காகக் கொண்டு சென்றார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சரியான பதில் தெரியாத சோனாக்ஷி முதலில் ராமன், சீதை என்று சந்தேகமாகக் கூறினார். பின்னர் அவர் தொலைபேசி அழைப்பு உதவியுடன் அக்கேள்விக்கு சரியான பதிலான லக்ஷ்மண் என்ற பதிலை அளித்தார்.
இப்போட்டியில் சோனாக்ஷி - ருமா தேவி இணை 12 லட்சம் வரை வென்றனர்.
இந்நிலையில் ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்விக்கு சோனாக்ஷிக்கு பதில் தெரியவில்லையா? என்று பலரும் சமூக வலைதளங்களில் அவரது கணக்கைக் குறிப்பிட்டு கேள்வி கேட்கத் தொடங்கினர்.
பல மீம்ஸ்களும் சோனாக்ஷியைக் கிண்டல் செய்து உருவாக்கப்பட்டன. மேலும், இந்திய அளவில் இதனை நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாகப் பல பதிவுகளை இட்டு ட்ரெண்ட் செய்தனர்.
இதற்கு முன்னர் பாலிவுட் நடிகை ஆலியா பட் இந்திய அதிபர் தொடர்பான கேள்விக்கு காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் தவறாக கூறியதற்காக சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.