

சான் ஃப்ரான்சிஸ்கோ
ட்விட்டர் பயனர்கள் தங்களின் ட்வீட்களில் மோசமான, காயப்படுத்துகிற ரிப்ளை இருக்கும்பட்சத்தில் அதை மறைத்துக்கொள்ளும் வசதியை ட்விட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் நெட்டிசன்கள், தங்களுக்குச் சம்பந்தம் இல்லாதது, தவறானது, புரியாதது என்று கருதும் ரிப்ளைகளைத் தங்களது டைம்லைனில் இருந்து மறைத்துவிட முடியும். இந்த வசதி முதல்கட்டமாக அமெரிக்கா மற்றும் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் வெளியிட்டுள்ள தகவலில், ''இந்தப் புதிய சோதனை வசதி மூலம், ட்விட்டரில் ஒரு பயனர், தன்னுடைய ட்வீட்டுக்கு வரும் வரம்பு மீறிய ரிப்ளைகளை மறைப்பதன் மூலம் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதைப் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்'' என்று தெரிவித்துள்ளது.
ரிப்ளை கமெண்ட்களை மறைக்கும் வசதியில், hide a Tweet என்று நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் ப்ளாக் செய்யவேண்டுமா என்று கேள்வியும் எழுப்பப்படும். இதற்கான வசதியையும் ட்விட்டர் செய்துள்ளது.
ட்விட்டரில் ஏற்கெனவே குறிப்பிட்ட நபரை, பக்கத்தை ப்ளாக் செய்யும் வசதி, குறிப்பிட்ட வார்த்தைகளை ம்யூட் செய்யும் வசதி ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎன்எஸ்